தற்போதைய செய்திகள்

தேர்தல் பிரச்சார கூட்டங்களை கொளுத்தும் வெயிலில் நடத்தக்கூடாது – அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அதிகாரி வேண்டுகோள்…

சென்னை:-

தேர்தல் பிரச்சார கூட்டங்களை அதிக வெயில் கொளுத்தும் பகுதிகளில் நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது நிலவும் வெப்பமான சூழ்நிலையில் அரசியல் கட்சியினர் பகலில் நடத்தும் பொதுக்கூட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மிக அதிக வெயில் நிலவும் சூழ்நிலையில் நடந்த பிரசார கூட்டங்களில் பங்கேற்றவர்களில் சிலர் இறந்து போன சம்பவங்களும் தேர்தல்ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே தேர்தல் பிரசார கூட்டங்களை அதிக வெயில் கொளுத்தும் காலகட்டங்களில் நடத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகள், வேட்பாளர்களைக் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும் பொதுக்கூட்டங்கள் நடக்கும் இடங்களில் நிழல் குடைகள், கூரைகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி, முதலுதவி வசதி போன்றவற்றை, அதில் பங்கேற்பவர்களின் நலனுக்காக அமைத்துத் தர வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது. இந்த ஆலோசனைகளுக்கு ஏற்ற வகையில் பொதுக்கூட்டங்களில் வசதிகளைச் செய்து தரும்படி ஒவ்வொரு அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், பிரசாரம் மேற்கொள்வோர் ஆகியோரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.