தற்போதைய செய்திகள்

தேர்தல் முடிந்த பிறகு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு…

நாகப்பட்டினம்

தேர்தல் முடிந்த பிறகு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் தாழை. ம.சரவணனை ஆதரித்து கீழ்வேளூர் தொகுதிட்பட்ட தேவூர் கடைவீதியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பிரச்சாரம் செய்து பேசியதாவது:-

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் பெற்றிருக்கிற கட்சிகள் எல்லாம் இன்று ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இது மெகா கூட்டணி. இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஏலம், முந்திரி, திராட்சை, கரும்பு மற்றும் ரூபாய் நூறு ரூபாய் வழங்கினார். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 கொடுத்தோம்.

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வட மாவட்டங்கள் எல்லாம் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்து. தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தற்போது வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் ரூ.2000 அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது.

அதுபோல மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கியுள்ளது. இது ஒரு ஆண்டு மட்டும் அல்ல, தொடர்ந்து 10 ஆண்டுகள் வழங்கப்படும். நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை ம.சரவணன் படித்த இளைஞர், நான்கு மொழிகள் பேசக்கூடியவர், எளிமையானவர், நல்ல பண்பாளர், அன்பானவர், தூயவர், உங்களுடன் இருப்பார், உங்களுக்காக சிறப்பாக பணியாற்றுவார். உங்களுடைய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார். அதற்கான மொழி வளமும் அவரிடம் இருக்கிறது. கேட்கிற பலமும் அவரிடத்தில் இருக்கிறது. ஆதலால் தாழை ம.சரவணனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.