தற்போதைய செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியதே கிடையாது – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு…

நாகப்பட்டினம்:-

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியதே கிடையாது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட கழகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளர் எம். சரவணன், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆர். ஜீவானந்தம் ஆகியோரை உணவுத்துறை அமைச்சரும், நாகை மக்களவை மற்றும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமான ஆர். காமராஜ் அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

தேர்தலையொட்டி கழகம் வலுவான வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது. 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தற்போது அவரே போலவே எளியவர்கள் இருவர் தமிழகத்தில் நல்லாட்சி செய்து வருகிறார்கள். இந்த ஆட்சித் தொடர வேண்டும்.

உலகத்தின் ஒப்பற்ற தலைவராக உள்ள நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதற்காகவும், மதசார்பற்ற இந்தியாவை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காகவும் நாம் அளிக்கும் வாக்கு இருக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை எதையும் நிறைவேற்றியது கிடையாது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கியுள்ளார். என்ன காரணத்தினால் அவர் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கியுள்ளார் என்று தெரியவில்லை. திமுகவைச் சேர்ந்த மு.கருணாநிதி 2011, 2016 ஆண்டுகளில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இதுதான் எனக்கு கடைசி தேர்தல் என கூறி வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அது நிறைவேறிவிடாது.

எந்த சக்தியாலும் கழகத்தின் வாக்கு வங்கியை சரித்து விடமுடியாது. நடைபெறவுள்ள நாகை மக்களவை, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள். வேட்பாளர்களின் வெற்றிக்கு கழகம் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.கே.வேதரத்தினம், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் கோபால், முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், பா.ம.க. மாநில நிர்வாகிகள் வேத.முகுந்தன், க.பாலு, நாகூர் ஷாகுல ஹமீது, பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் நேதாஜி, வழக்கறிஞர் கீதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழக மாவட்ட நிர்வாகிகள் சண்முகசுந்தரம், வைரவநாதன், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக வழக்கறிஞர் அணி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கழக கூட்டணி கட்சிகளின் மாநில, நாகை, திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாகை நகர கழக செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார். நிறைவில் ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.