தமிழகம்

தேர்தல் விதிமீறல் தமிழ்நாடு முழுவதும் 4185 வழக்குகள் பதிவு – தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்…

சென்னை:-

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 9ம்தேதி மட்டும் 2.33 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடலூரில் அதிகபட்சமாக 1.27 கோடியும், காஞ்சிபுரத்தில் 24 லட்சம், விழுப்புரத்தில் 18.7 லட்சம் என பல இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 124,63 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 986.6 கிலோ தங்கம்,492.3 கிலோவெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9ம்தேதி மட்டும் 1.77 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 7280 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொது பார்வையாளர் மேற்பார்வையில் பணி செய்வார்கள். இவர்களுக்கு பொது பார்வையாளர்கள் தேர்தல் பயிற்சி அளிப்பார்கள். இவர்கள் பதட்டம் மற்றும் மிகப்பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் பணி செய்வார்கள்.

இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் கடந்த 1.1.2019 வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். தற்போது அறிவிக்கப்பட்ட 4 சட்டமன்ற இடைத்தேர்தல் உள்ளிட்ட வரும் மே 27-ம்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமலில் இருக்கும். வேலூரில் பணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் இங்குத் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.