தற்போதைய செய்திகள்

தேர்தல் வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைக்க வேண்டும் – கழகத்தினருக்கு, அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள்…

சென்னை

நாடாளுமன்றத்தேர்தல் எனும் அக்னி பரிட்சையில் வெற்றிக்கனியை பறிக்க கழகத்தினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தேர்தல் குறித்தும், புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி பங்கேற்றார்.

அப்போது அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

மதுரையில் அம்மா பேரவை சார்பில் நடைபெறவிருக்கும் சைக்கிள் பேரணிக்கு காலை 6 மணிக்கு வாருங்கள் என்று அமைச்சர் உதயகுமார், என்னை அழைத்தார். அதிகாலையில் எப்படி மக்கள் வருவார்கள் என்று கேட்டபோது 5000 பேர் வருவார்கள் என்றார். நான் அங்கு சென்று பார்த்த போது காலை 6 மணிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இன்று நடைபெறும் இந்த கூட்டத்திற்கும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று இருக்கிறார்கள். அந்தளவுக்கு எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சிறப்பாக செயலாற்றக்கூடியவர்அமைச்சர் உதயகுமார்.

நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இது வெறும் சொல்லாக இருக்கக்கூடாது. செயலாக மாற வேண்டும். இந்த தேர்தல் என்பது கழகத்திற்கு அக்னிப்பரீட்சை போன்றது. ஒருபுறம் எதிரியுடனும், மறுபுறம் துரோகியுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த தேர்தலில் வென்று விட்டால் எதிரிக்கும், துரோகிக்கும் இனி இங்கு வேலையில்லை.

இதை மனதில் வைத்து ஒவ்வொருவரும் மெத்தனத்தோடு இல்லாமல் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து வெற்றிக்கு உழைக்க வேண்டும். கூட்டணி அமைக்க முடியாது என்றும்அ.தி.மு.க தனித்து விடப்படும் என்று நினைத்தார்கள். ஆனால் இன்று வெற்றிக்கூட்டணியை அமைத்திருக்கிறாம். இந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி 2021-ல் கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வழிவகுக்கும். எனவே இந்த இரண்டு மாத காலம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.