தமிழகம்

தேவையற்ற விமர்சனங்களை தொடர்ந்தால் ஸ்டாலினுக்கு உரிய பதிலடி கொடுப்போம் – முதலமைச்சர் கடும் எச்சரிக்கை…

கரூர்:-

தேவையறந்ற விமர்சனங்களை தொடர்ந்தால் ஸ்டாலினுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று முதலமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி  கரூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் மு. தம்பிதுரையை ஆதரித்து விராலிமலை, மாத்தூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கி உள்ள கட்சிகள். அதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு எதிர்கொண்டு நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி. மக்களை குழப்புவதற்காகவே, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊராட்சி கூட்டம் என்று சொல்லி கிராமங்கள் தோறும் சென்று கூட்டம் நடத்தி, அங்குள்ள பொது மக்களிடம் குறைகள் கேட்டு வருவதாக சொல்கிறார். இவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார், துணை முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் கிராமப் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களை சந்தித்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், இன்று எதிர்கட்சியாக இருந்து கொண்டு குறைகளை கேட்டு என்ன செய்யப்போகிறார்.

அண்ணா தி.மு.க. அரசு கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதிகள், தெருவிளக்கு வசதி, கழிப்பிட வசதி போன்ற அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி வருகிறது. என்னுடைய அரசியல் அனுபவம் கூட இல்லாத உதயநிதி, என்னைப்பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. நாட்டுமக்களைப் பற்றி சிந்திக்காமல், தங்கள் குடும்ப நலனை மட்டுமே சிந்தித்து தி.மு.க. செயல்படுகிறது. இந்த அரசை கலைத்துவிடலாம் என்றோ, கட்சியை உடைத்துவிடலாம் என்று ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும். ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மிகப்பெரிய இயக்கம் அ.இ.அ.தி.மு.க. எதையும் எதிர்கொள்ளக்கூடிய சக்தியும், ஆற்றலும் இந்த இயக்கத்திற்கு உண்டு. எனவே, எதிர்கட்சி தலைவர் கண்ணியத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையற்ற விமர்சனங்களை அவர் பேசி வந்தால், நாங்களும் உரிய பதிலடி கொடுப்போம். விஞ்ஞானரீதியாக ஊழல் புரிந்தவர்கள் தி.மு.கவினர் தான். அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்திலே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் தீர்ப்பு வரும்போது தான் யார் ஊழல் புரிந்துள்ளார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரியவரும். தி.மு.கவின் பொய் பிரச்சாரத்தை பொதுமக்கள் எப்போதும் நம்பமாட்டார்கள். மக்களை குழப்புவதற்காகவே திட்டமிட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணம் பற்றி பேசி வருகிறார்.

தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டமன்றத்திலும் அதை அறங்கேற்றினார்கள். இந்த அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது சட்டமன்றத்துக்குள்ளேயே எதிர்கட்சித்தலைவர், துணைத்தலைவர், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று, ஆரவாரம் செய்ததோடு சபாநாயகரின் மேஜையை கீழே தள்ளி சேதப்படுத்தினார்கள்.

சபாநாயகரின் கையைப் பிடித்து இழுத்து அவரை அவமரியாதை செய்தார்கள். பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் முதலமைச்சர் என்று கூட பாராமல் என்னுடைய மேஜை மீதும், அமைச்சர்கள் மேஜை மீதும் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள், இன்னும் மறக்கவில்லை. இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.கவினருக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.