தற்போதைய செய்திகள்

தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் – எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் உறுதி…

சாத்தூர்:-

சாத்தூரில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தெரிவித்தார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தொகுதி மக்களை சந்தித்து நன்றி கூறுவதற்காக நேற்று சாத்தூர் வந்தார். அவருக்கு சாத்தூர் அருகே எட்டூர்வட்டம் விநாயகர் கோவில் முன்பு சாத்தூர் தொகுதி கழகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள விநாயகர் கோயிலில் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் சாமிதரிசனம் செய்தார். அங்கு கழக நிர்வாகிகள். கூட்டணி கட்சி நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மனுக்கு வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து சாத்தூரில் உள்ள காமராசர், முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைகளுக்கும், அம்பேத்கர், ஒண்டிவீரன், ராமசாமிநாயுடு, ஓமந்தூரார், விஸ்வகர்மா, வஉசி மற்றும் முக்கிய தேசத்தலைவர்களின் திருவுருவ படங்களுக்கு எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். சாத்தூரில் முத்துராமலிங்கத்தேவர் சிலை முதல் பஸ் நிலையம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் மெயின் பஜாரில் நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது சாத்தூர் மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் எம்.எல்.ஏ.வுக்கு வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் சேதுராமானுஜம், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, நகர செயலாளர் வாசன், பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம். திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், குருசாமி, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்கிக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரின் ஆலோசனைப்படி சாத்தூர் தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்துவேன். சாத்தூரில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படும். சாத்தூர் தொகுதி மக்கள் உதவிக்காக என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்வேன் என்றார்.