தற்போதைய செய்திகள்

தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் ஸ்டாலின் முதலில் தனது பெயரை மாற்றி கொள்ளட்டும் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை:-

தமிழ் மொழிக்கு தி.மு.க.வினரால் தான் ஆபத்து என்றும், தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் ஸ்டாலின் முதலில் தனது பெயரை தமிழில் மாற்றிக் கொள்ளட்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பெரிய மீன்பிடி அணையும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை  மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்து ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் சிறிய படகுகள் அணையும் தளம், மற்றும் மீன்விற்பனை கூடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழை வளர்ப்பது என்பது அரசின் தலையாய கடமை. தமிழ் மொழிக்கு எந்த காலத்திலும் அழிவு கிடையாது. பல கால கட்டத்தில் பல்வேறு படை எடுப்புகள் நடந்தன. தமிழ் மொழி அழிந்து போய்விட்டதா? தமிழ் மொழிக்கு பேராபத்து திமுகவால் தான். குறிப்பாக ஸ்டாலின் குடும்பம்தான்.

கழக ஆட்சியில்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஸ்டாலின் முதலில் அவர் பெயரை தமிழில் வைத்துள்ளாரா? முதலில் நாம் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அவர்கள் நடத்தும் பள்ளியில் தமிழ் கற்று கொடுக்கப்படுகிறதா? இந்தியையும், ஆங்கிலத்தையும் வளர்க்கிறார்கள்.

ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா? நிறைய தமிழ் பெயர்கள் உள்ளன. எனவே அவர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதனை தமிழக மக்கள் நிச்சயமாக பாராட்டுவார்கள். நான் வேண்டுமானால் வைக்க ஆலோசனை தருகிறேன். செம்புல பெயல் நீரார், சீத்தலை சாத்தனார், பிசிராந்தையார் போன்ற தமிழ் பெயர்களில் ஒன்றை ஸ்டாலின் வைத்துக் கொண்டால் வரவேற்வோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

இந்த விழாவில் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, ராயபுரம் பகுதி கழக செயலாளர் ஏ.டி.அரசு, தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.