தற்போதைய செய்திகள்

தொண்டாமுத்தூரில் விரைவில் சிட்கோ தொழிற்பேட்டை துவக்கம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவை

தொண்டாமுத்தூர் தொகுதியில் விரைவில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 818 பயனாளிகளுக்கு ரூ.4.44கோடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

முதலமைச்சரால், மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த சிறப்பு திட்டத்தை செம்மையாக நடைமுறை படுத்துவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த ஒரு அலுவலர் குழுவின் மூலம் மனுக்கள் பெறப்படும். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். இதுபோன்று, அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும், அனைவரும் பெற்று பயனடைய வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலம் காணாத அற்புத வளர்ச்சி திட்டத்தை தந்து வருகிறோம். காந்திபுரம் முதலடுக்கு உயர்மட்ட மேம்பாலத்தை தொடர்ந்து இரண்டாம் கட்ட மேம்பால பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம், சாலைகள், பாலங்கள், பூங்காக்கள் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவினாசி சாலையில் ரூ.1000 கோடி மதிப்பில் பாலம் அமைக்க ரூ.3.40 கோடி மதிப்பில் முழுமையான திட்ட அறிக்கை தயார் செய்யபட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிகிச்சை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் அம்மா ஐ.ஏ.எஸ். அகாடமி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்ற 36 பேர் அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று உள்ளனர்.

மேலும் டி.என்.பி.எஸ்சி. இலவச கையேடும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் விரைவில் சிட்கோ தொழிற்பேட்டை அமையவுள்ளது. இதனால் எண்ணற்றோர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு மட்டுமே வருவார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. பொது மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அத்தனையும் செய்வோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.