தொலைநோக்கு பார்வையுடன் கழக அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்

காஞ்சிபுரம்:-
தொலைநோக்கு பார்வையுடன் கழக அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது என்று காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி கோவிலம்பாக்கத்தில் மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.பி.கந்தன், ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், கோவிலம்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் கோவிலம்பாக்கம் சி.மணிமாறன் மற்றும் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் எண்ணங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கழக அரசு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எந்த அரசும் செய்யாத ஒரு புரட்சியாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் கழக அரசு வழங்கியது. திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று தெரிவித்தார். இது மக்களின் பணம் அதனால்தான். இந்த பணம் மக்களிடம் சேர்க்கப்படுகிறது. மேலும் அரிசி, வெல்லம், வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதை கணக்குப் போட்டால் முதல்வர் தலைமையில் செயல்படும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு 3200 கோடி ரூபாய் தமிழக மக்களுக்கு வழங்கி இருக்கிறது. அனைத்து திட்டங்களையும் சிறப்புடன் செயல்படுத்தி இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தொலைநோக்கு பார்வையுடன் கழக அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களான பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், புத்தகப் பை, சீருடைகள், காலணிகள், மிதிவண்டியும் வழங்கி பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி வருகிறது.
அதோடு மட்டுமின்றி உலக நடப்புகளை உட்கார்ந்த இடத்திலே பார்க்கக்கூடிய மடிகணினி வழங்கிய ஒரே முதல்வர் அம்மா அவர்கள் தான். இதை சொல்வதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படியொரு சிறப்பான திட்டங்களை பார்க்க இயலாது. மேலும் இங்கு செயல்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு திட்டங்களையும் பிற மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தங்களது மாநிலத்திலும் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டங்களை நமது அரசு நிறைவேற்றி வருகிறது.
இவ்வாறு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.