சிறப்பு செய்திகள்

தொழிலாளர் அலுவலர் அலுவலகக் கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 22.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் பெரம்பலூர், சேலம், விழுப்புரம், ஈரோடு, விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகக் கட்டடம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்தார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் மாவட்ட அளவில் தொழிலாளர் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வலுவலகங்களுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் வருவதால் மாவட்டந்தோறும் போதுமான உள் கட்டமைப்பு வசதியுடன் கூடிய சொந்த கட்டடம் கட்டுதல் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் நீலகிரி ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகங்களுக்கு சொந்த அலுவலக கட்டடங்கள் கட்டப்படும் என்று புரட்சித்தலைவி அம்மா 13.5.2013 அன்று சட்டப்பேரவை விதி
எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூரில், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக, 10,760 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அலுவலகம், தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கம்மியர் மோட்டார் வண்டி பிரிவுக்கான வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடம், கரூர் மாவட்டம், கரூர் – அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கம்மியர் ஆட்டோபாடி ரிப்பேர் பிரிவு வகுப்பறை மற்றும் பணிமனைக் கட்டடம்; ஈரோடு – அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்,

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களை திறம்பட நிர்வகித்து கண்காணித்திட, விழுப்புரத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவிலும், சேலத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்கள் என மொத்தம் 6 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலகக் கட்டடம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி  கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

புதுடில்லியில் 5.9.2018 அன்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், தலைமை பயிற்சி இயக்ககத்தால் நடத்தப்பட்ட தரமதிப்பீட்டில் இந்தியாவில் உள்ள 4811 தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொழிற்பயிற்சி நிலையங்கள் மூன்று நட்சத்திர மதிப்பீடுகளுக்கு மேல் பெற்று, நாட்டிலேயே தரவரிசையில் முதல் 10 இடங்களில் 5 தமிழ்நாட்டில் அமையப் பெற்று, தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்கியதோடு, முதல் பத்து தரவரிசையில் இடம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் திருச்செந்தூர் மூன்றாம் இடத்தையும், மதுரை (மகளிர்) நான்காம் இடத்தையும், நாமக்கல் ஆறாவது இடத்தையும், திருச்சி எட்டாவது இடத்தையும், உளுந்தூர்பேட்டை பத்தாவது இடத்தையும் பெற்றதற்காக மாண்புமிகு மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் அவர்களால் மேற்கண்ட ஐந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மத்திய அரசால் வழங்கப்பட்ட அப்பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மேற்கண்ட ஐந்து அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

மாணவர்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு மேற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல், உளவியல் ஆய்வின் அடிப்படையில் திறன் அறிதல், போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா வகுப்புகள் நடத்துதல், தனியார் துறை பணி நியமனத்திற்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், 1 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை (State Career Guidance Centre) முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்தார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் 1 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள www.tamilnaducareerservices.gov.in என்ற மெய்நிகர் கற்றல் வலைதளத்தை (Virtual Learning Portal)) முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்தார்.இந்த வலைதளம், காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின்னணு புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வுகள் ஆகியவற்றை எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் உடனடியாகப் பயன்படுத்தி பயனுறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 52 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோஃபர் கபீல், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி, தொழிலாளர் துறை ஆணையர் முனைவர் இரா.நந்தகோபால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.