வேலூர்

தோல்வி பயத்தில் ஏதேதோ உளறுகிறார் மனநோயாளியாகி விட்டார் ஸ்டாலின் – வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி கடும் தாக்கு…

வேலூர்:-

வேலூர் மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் வேலம் ஊராட்சியில் ஒன்றிய கழக செயலாளர் பெல்கார்த்திகேயன் தலைமையில் இதய தெய்வம் அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், தலைமைக் கழக பேச்சாளர் காஞ்சி ராமு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ பேசியதாவது:-

கழகம் அமைத்துள்ள மெகா கூட்டணியை கண்டு பயந்த திமுக தலைவர் ஸ்டாலின் மன நோயாளி ஆகி விட்டார். திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கடலே இல்லாத திருப்பூரில் துறைமுகம் அமைப்பேன் என்று பேசியுள்ளார். மற்றொரு கூட்டத்தில் ஜப்பான் நாட்டின் துணை முதல்வராக இருந்து உள்ளேன் என்று பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் துணை முதல்வராக இருந்ததாக பேசியுள்ளார். இந்திய நாடு எப்போது சுதந்திரம் பெற்றது என்பதே ஸ்டாலினுக்கு தெரியவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஸ்டாலின் மன நோயாளி ஆகி உள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஸ்டாலின் பகல் கனவு என்றுமே பலிக்காது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஸ்டாலின் நடந்தாலும், உருண்டு போனாலும் தமிழகத்தின் முதல்வராக என்றுமே வர முடியாது.திமுக வாங்கி வாங்கி பழக்கமான இயக்கம். கழகம் கொடுத்து கொடுத்து கழகத் தொண்டர்களை வாழவைக்கும் இயக்கம். தி.மு.க ஆட்சி காலத்தில் மக்கள் பயன் பெறும் திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனைகளுக்கு திமுக குரல் கொடுக்காமல் துரோகம் செய்த இயக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா தனித்து நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை உருவாக்கினார்.

இவ்வாறு வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ பேசினார்.