தற்போதைய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு புதிய வியூகம் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

திண்டுக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் வெற்றி பெற புதிய வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட கழக அலுவலகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா, மற்றும் 5-ந் தேதி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை துவக்கி வைக்க வருகைதரும் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது, வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வி.மருதராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை திண்டுக்கல் மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சீரும் சிறப்புமாக கொண்டாட வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் திண்டுக்கல்லுக்கு மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததாக கூறி அடிக்கல் நாட்டினார்களே தவிர அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை, இடமும் ஒதுக்கப்படவில்லை. ஏமாற்று வேலையை தான் செய்தனர். ஆனால் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பிரதமரிடம் பேசி 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு பெற்றுத் தந்துள்ளனர்.

அத்திட்டத்திற்காக நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.1700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் ஒடுக்கம் பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட இருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் கட்டுமான பணிகளை துவக்கி வைக்க மார்ச் 5-ந் தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தர உள்ளனர். எனவே முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

நடைபெற்று முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் அருமையான திட்டங்களை அறிவித்து உள்ளார். தமிழக அரசுக்கு கடன் சுமையை ஏற்றாத வகையில் மிக சிறப்பான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இத்திட்டங்களை மக்களிடம் கழக நிர்வாகிகள் எடுத்துக்கூற வேண்டும். வரவுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெற முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் புதிய வியூகம் வகுத்து தந்துள்ளனர். அதன்படி கழக நிர்வாகிகள் பாடுபட்டு கழகத்திற்கு தி.மு.க.வை தோற்கடித்து வெற்றியை தேடித்தர வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்பதற்காக தான் 1972-ல் கழகத்தை ஆரம்பித்தார். ஆனால் நமது கட்சியில் உள்ள சில நிர்வாகிகள் திமுகவுடன் உறவு வைத்து இருந்ததால் தான் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் கழகம் தோல்வியை தழுவியது. அவர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படுவார்கள். முதல்வரும் துணை முதல்வரும் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளனர். அதிமுக கறை வேட்டி கட்டி இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் சமூகத்தில் மரியாதை உள்ளது. கழகத்தில் தொண்டனாக இருக்கும் ஒவ்வொருக்கும் பெருமை உள்ளது. எனவே கழகத்தின் வெற்றிக்காக நிர்வாகிகள் அரும்பாடு படவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளரும், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம், மாவட்ட பொருளாளர் உதயகுமார், ஆவின் சேர்மன் ஏ.டி.செல்லச்சாமி, கொடைக்கானல் நகர கழக செயலாளர் எம்.ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிசாமி, சுப்புரத்தினம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் நிலக்கோட்டை யாகப்பன், நத்தம் ஷாஜகான், சாணார்பட்டி ராமராசு, திண்டுக்கல் ஜெயசீலன், ஆத்தூர் பி.கே.டி. நடராஜன், ஒட்டன்சத்திரம் பி.பாலசுப்பிரமணி, நகர செயலாளர் உதயம் ராமசாமி, வத்தலகுண்டு நகர செயலாளர் பீர் முகமது, ஒன்றிய செயலாளர் பாண்டியன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், திண்டுக்கல் பகுதி கழக செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.