சிறப்பு செய்திகள்

நகர் ஊரமைப்பு துறையில் 15 பேருக்கு பணி ஆணை- துணை முதலமைச்சர் வழங்கினார்.

சென்னை:-

நகர் ஊரமைப்பு துறையில் 15 பேருக்கு நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்பட்டு வரும் தமிழக அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள கட்டடக் கலை, திட்ட உதவியாளர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் 2 பணியிடங்களும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் வாயிலாக 12 பணியிடங்களுக்கும், நகர் ஊரமைப்பு துறையில் பணிபுரிந்து பணியிடை மரணம் அடைந்த ஊழியர் ஒருவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும் என மொத்தம் 15 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட 15 பேர்களுக்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் டி.கார்த்திகேயன் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் உடனிருந்தனர்.