சிறப்பு செய்திகள்

நடப்பாண்டில் 23 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்துள்ளனர் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்…

சென்னை:-

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 23 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-

வறட்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கத்தான் காப்பீட்டு திட்டத்திலே விவசாயிகளை இடம்பெற செய்திருக்கின்றோம். ஆகவே, வறட்சி வருகின்றபோது, இப்படி விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற போது, இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதற்கு தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, இன்றைக்கு பார்த்தீர்களானால், திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, 2016-17ல் காப்பீட்டு நிறுவனத்தால் 20 கோடியே 97 லட்சத்து 20 ஆயிரம் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 22,942 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 16 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 17,610 விவசாயிகளின் வங்கி கணக்கில் 11 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள இழப்பீட்டுத் தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2017-18ஆம் ஆண்டு காப்பீட்டு நிறுவனத்தால் 84 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 724 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 56 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 297 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 38 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இன்றைக்கு 68 சதவிகிதம் நேரடியாக வரவு வைக்கப்பட்டு, மீதம் உள்ள இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. 2018 காரிப் பருவத்தில் 2,310 பரப்பு ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டு, 2,024 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

இது எல்லாம், இப்படி விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றபோது, காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக, இன்றைக்கு நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பற்றி கொடுத்திருக்கிறார்கள். அதைப்பற்றி தான் இங்கே சொல்லியிருக்கின்றேன். மாநிலம் முழுவதும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கிட்டத்தட்ட காப்பீட்டு நிறுவனங்களால் 3527 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக 12 லட்சத்து 9 ஆயிரத்து 844 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இதுவரை 11 லட்சத்து 88 ஆயிரத்து 501 விவசாயிகளுக்கு 3399 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 826 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 3 ஆயிரத்து 370 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டுக்கு இது.

அதேபோல 2017-18ஆம் ஆண்டு, காப்பீட்டு நிறுவனங்களால் 1128 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 822 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 996 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 717 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 747 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2018-19ஆம் ஆண்டு நடப்பாண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 23 லட்சம் விவசாயிகள் 34 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி பரப்பில் பதிவு செய்துள்ளார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், இயற்கை சீற்றத்தினால், பருவமழை பொய்க்கின்ற போது, வறட்சியால் ஏற்படுகின்ற பாதிப்பு விவசாயிகளை பாதிக்கின்றது. ஆகவே, அப்படிப்பட்ட பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீள்வதற்காக காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்படும் என்பதை தங்கள் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.