தற்போதைய செய்திகள்

நடப்பாண்டு விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்…

சென்னை:-

நடப்பாண்டு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில்  தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:- 

அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சரின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் மேம்பாடு மற்றும் நலனில் அக்கறை கொண்டு தமிழகம் முழுவதும் 2011 முதல் 22.05.2019 வரை 81,74,715 விவசாயிகளுக்கு ரூ. 41,907.97 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் (2016-2019) 30,63,986 விவசாயிகளுக்கு ரூ.18,575.93 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த முதலீட்டுக் கடனாக 4,48,043 விவசாயிகளுக்கு ரூ.2,388.68 கோடியும், தானியக் ஈட்டுக் கடனாக 1,90,307 விவசாயிகளுக்கு 2278.14 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் தான் 2016-17 முதல் 15.05.2019 வரை பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, 18,86,331 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 4,920.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பயிர்கடன் குறியீடாக ரூ.10,000 கோடி முதலமைச்சரால் நிர்ணயிக்கப்பட்டு, 16,093 நபர்களுக்கு ரூ.117.80 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பயிர்கடன் பெறும் விவசாயிகளுக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்கும் வகையில், முறையே 2,78,907 லட்சம் ருபே டெபிட் கார்டுகளும், 3,56,914 லட்சம் ருபே கிசான் கார்டுகளும் 30.04.2019 வரை வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பிற நபர்களுக்கும் உதவிடும் பொருட்டு கடந்த 2011 முதல் 30.04.2019 வரை சிறுவணிகர்களுக்கான சிறுவணிகக் கடனாக 14,25,285 பயனாளிகளுக்கு ரூ.1,610.70 கோடியும், சுயஉதவிக் குழு கடனாக 3,46,573 குழுக்களுக்கு ரூ.5,147.46 கோடியும், மகளிர் தொழில் முனைவோர் கடனாக 1,11,710 பயனாளிகளுக்கு ரூ.455.91 கோடியும், பணிபுரியும் மகளிர் கடனாக 77,247 பயனாளிகளுக்கு ரூ.460.63 கோடியும், மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடனாக 54,995 பயனாளிகளுக்கு ரூ.219.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் 23364 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 9560 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 32924 நியாயவிலைக் கடைகள் மூலம் 1.83 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் கடந்த 2011 முதல் 31.3.2019 வரை 670 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 1718 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 2388 நியாயவிலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் பொது விநியோகத்திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளில் இருப்பு விவரங்கள் உள்ளிட்ட பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் அனைத்தும் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை மற்றும் கரும்புத்துண்டு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000/- ரொக்கப் பரிசு வழங்க ஆணையிட்டதற்கிணங்க, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் 32 ஆயிரத்து 918 நியாயவிலைக் கடைகள் மூலம் 1 கோடியே 83 ‘லட்சத்து 14 ஆயிரத்து 193 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,831 கோடியே 41 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கமாக எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கப்பட்டது.

அம்மா அவர்களின் உன்னதத் திட்டமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 3 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 30.05.2019 வரை 45,179 மெ.டன் காய்கறிகள் ரூ. 131.12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் 20ரூ வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையில் 112 அம்மா மருந்தகங்கள் மற்றும் 172 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 30.04.2019 வரை ரூ.809.70 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை, குறைந்த விலையில் தரமான ஜெனரிக் மருந்துகளை பொதுமக்கள் பெற்று பயனடையும் வகையில் விற்பனை செய்து வருகிறது.

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 27 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 14 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. முதலமைச்சரின் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பாக 100 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளைத் திறக்க திட்டமிட்டதின் தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 103 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மேலும், இச்சிறப்பங்காடிகள் குடியிருப்புப் பகுதிகளில் அமையப் பெற்றுள்ளதால், பொதுமக்கள் தரமான பொருட்களை குறைவான விலையில் பெற்று பயன் பெறமிகவும் வசதியாக இருக்கும். இங்கு விற்பனை செய்யப்படும் 300 வகையான பொருட்கள் வெளிச்சந்தை விலையைவிட 5ரூ குறைவாக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த ஆகஸ்ட் 2018 முதல் மார்ச் 2019 வரை ரூ.3.67 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ என்றார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (முழுக் கூடுதல் பொறுப்பு) கு.கோவிந்தராஜ், ஆலோசகர் இரா. கார்த்திகேயன், கூடுதல் பதிவாளர்கள் முனைவர் க.இராஜேந்திரன், ஆர்.ஜி.சக்தி சரவணன், ஆ.இராமலிங்கம், கே.ஜி.மாதவன், பா.பாலமுருகன், ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், டாக்டர்.எஸ்.செந்தமிழ் செல்வி, வெ.லெட்சுமி, டாக்டர் டி.அமலதாஸ், ஆர்.மீராபாய், கோ.செந்தில்குமார், எம்.முருகன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.