திருவள்ளூர்

நடிகர் கமலின் பகல் கனவு பலிக்காது – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ கடும் தாக்கு…

திருவள்ளூர்:-

தமிழ்நாட்டை ஆள நினைக்கும் நடிகர் கமலின் பகல் கனவு பலிக்காது என்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி 6 மற்றும் 4 வது வட்டம் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வட்ட செயலாளர்கள் மணிக்குமார், சரவணன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு பேசியதாவது:-

வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது நாம் நினைப்பது போன்று சாதாரண தேர்தல் அல்ல. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்யப்போகும் தேர்தல். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு தந்த சரித்திர நாயகன். அவர் சினிமாவில் நடித்ததை மக்களுக்கு செய்து காட்டினார். அவர் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சி, மது அருந்தும் காட்சி ஏதாவது இருந்ததா? ஆனால் இப்போது இருக்கும் நடிகர் கமலஹாசன் இளைஞர்கள் கெட்டு போவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் சினிமாவில் செய்கிறார். தமிழ் கலாச்சாரம் பற்றி கமலுக்கு தெரியுமா? கமலஹாசன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று பகல் கனவு கான்கிறார். அவர் கனவு பலிக்காது.

திரைப்படத்தில் தன் நடிப்பின் மூலம் ஒழுக்கத்தை கற்றுத் தந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் தன்னிலை மறந்து தான் பேசுவது தனக்கே புரியாமல் கமல் இன்று கழக அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார். பெண்களின் பாதுகாப்பை பற்றி அவர் பேசுகிறார். தமிழக பெண்களுக்கும், பெண் குழந்தைக்கும் பாதுகாப்பான ஒரே அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னெற்றக் கழகம் தலைமையிலான அம்மாவின் அரசு மட்டும் தான். அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மாணவ மாணவிகளுக்கு 14 வகையான நலத்திட்டங்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி என பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார்.

இன்று சாமானிய மக்களின் மனதில் அம்மா அவர்கள் எப்போதும் குடி கொண்டுள்ளார். பெண்களின் வாழ்வு முன்னேற அம்மா அவர்கள் பெண் கமாண்டோ படை, குழந்தை பேறு கால விடுமுறை, குழந்தை பிறந்தவுடன் 18 வகையான அம்மா குழந்தை நல பெட்டகம் என பல்வேறு திட்டங்களை வழங்கினார். ஏழை பெண்களுக்கு வளைகாப்பு செய்ய முடியாத நிலையில் சமுக நலத்துறையின் சார்பில் அம்மாவின் அரசே வளைகாப்பு நடத்தி அவர்களுக்கு சீர்வரிசை முதற்கொண்டு வழங்கும் அரசு இந்திய திருநாட்டிலேயே அம்மா அரசு மட்டும் தான். வேறு எந்த அரசாங்கமும் செய்ய முடியாத சாதனைகளை அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் அரசு செய்கிறது.

அம்மா அவர்கள் கூறியது போல் தனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் தழைத்தோங்க அதற்கு வித்தாக வருவது தான் வரும் நாடாளுமன்ற தேர்தல். இன்று நாம் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். ஆனால் தி.மு.கவினர் எதை சொல்லி ஓட்டு கேட்பார்கள். தி.மு.க என்றாலே தில்லு, முல்லு கட்சி என்று பிரேமலதா கூறியது உன்மை தான். அதனால் தான் அ.தி.மு.க. மெகா கூட்டணியை சிதைக்க பார்க்கிறார்கள் தி.மு.கவினர். இன்று தி.மு.கவில் உள்ள அத்தனை பேரும் கோடீஸ்வரர்கள். ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை.

நாங்கள் மக்களோடு, மக்களாக உள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க பாசக்கயிறோடு வைகோ ஸ்டாலின் கூடவே வருகிறார். அவர் பார்த்துக் கொள்வார் ஸ்டாலினை. நாம் களப்பணியாற்றினால் மட்டும் போதும். கழக ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் யாரை அடையாளம் காட்டுகிறார்களோ அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். அம்மாவின் நல திட்டங்கள் தொடர 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றிவாகை சூட சூளுரைப்போம்.

இவ்வாறு வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் காசு ஜனார்த்தனம், அஜாக்ஸ் பரமசிவம், பொருளாளர் ராஜேந்திரன், புலவர் ரோஜா, பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்