விளையாட்டு

நடுவரை திட்டிய இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு அபராதம்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜேசன் ராய் 85 ரன் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் ‘லெக்சைடில்’ வீசிய பந்தை அடிக்க முயன்றார். அந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்ச் அவுட் கேட்டு முறையிட்டார்.

உடனே நடுவர் தர்மசேனா அவுட் என்று கையை உயர்த்தி விட்டார். ஆனால் ஜேசன் ராய் பந்து பேட்டில் படவில்லை என்றுகூறி நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். அந்த சமயத்தில் இங்கிலாந்திடம் டி.ஆர்.எஸ். ரிவியூ வாய்ப்பு இல்லாததால் அப்பீல் செய்ய முடியவில்லை.

அதனால் அதிருப்தியடைந்த ஜேசன் ராய் நடுவரை சகட்டுமேனிக்கு திட்டி வெளியேற மறுத்தார். பின்னர் மற்றொரு நடுவர் சமாதானம் படுத்த கோபத்துடன் வெளியேறினார். டி.வி. ரீப்ளேவில் பந்து பேட் மற்றும் கையுறையில் உரசவில்லை என்பது தெரிந்தது.

நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜேசன் ராயின் செயல் ஐ.சி.சி.யின் விதியை மீறியதாகும். இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத் தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. அத்துடுன் சஸ்பெண்டுக்கான இரண்டு புள்ளிகளையும் வழங்கியது.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜேசன்ராய்க்கு 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கையில் இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.