சிறப்பு செய்திகள்

நமது மகத்தான வெற்றியை விரைவில் நாடு கண்குளிர பார்க்கும் – கன்னியாகுமரி விழாவில் துணை பேச்சு…

பிரதமருடன் ஒன்றிணைந்து நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நிச்சயமாக வெற்றிக்கொடி நாட்டும் அந்த மகத்தான வெற்றியை மிக விரைவில் நாடு கண் குளிர பார்க்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்ற விழாவில் பேசுகையில் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில்  நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் ஆற்றிய உரை வருமாறு:- 

நமது மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், தமிழ்நாட்டிற்கு பெரும் பயன் தரவுள்ள துடிப்பான பல திட்டங்களை அள்ளி வழங்கவிருக்கும் இந்த குமரி முனை, வரலாற்றுச் சிறப்புமிக்கது, பாரம்பரியப் பெருமை கொண்டது.

முக்கடல் சூழும் முனை
முத்தமிழ் போற்றும் முனை நமது கன்னியாகுமரி

சுவாமி விவேகானந்தரின் ஆற்றலை
உலகறியச் செய்த தியான முனை

அன்னை பகவதி ஆட்சி செய்து
அனுதினமும்அருள் பாலிக்கும் அன்பு முனை

பாரதத் தாயின் திருமுடி காஷ்மீர் என்றால்,
அன்னையின் திருப்பாதங்களைத் தாங்கி நிற்கும்
தெய்வ முனை அதுதான் நமது கன்னியா குமரி முனை.

இத்தனை சிறப்புகள் மிக்க இந்த கன்னியாகுமரியில், பாரதப் பிரதமர் பங்கேற்று, சீரோடும் சிறப்போடும் நடைபெறும் இந்த விழா, நாம் விரைவில் அடைய இருக்கும் இமாலய வெற்றியின் தொடக்கம் தான் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரேநாடு தான் என்று சொல்வது உண்டு. அது இப்போது உண்மையாகி விட்டது. நிலையான, உறுதியான நடவடிக்கையால் பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் மிரட்டலை துணிச்சலுடன் எதிர்கொண்டது பாராட்டுக்குரியது.அண்டைநாடுகளின் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல், பிரதமர் நரேந்திரமோடி, நரசிம்ம அவதாரம் எடுத்தது போல, கண் உறங்காமல், வீரமிகு இராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை வதம் செய்ததைப் பார்த்து, பார் முழுவதும் பாரதப் பிரதமரைப் போற்றுகின்றது, பாராட்டுகின்றது.

எதிர்காலத்தில், எந்த ஒரு நாடும் இந்தியாவை எதிர்க்கவே அஞ்சக்கூடிய அளவிற்கு, அவரால் மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கைகள், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளன என்பதை மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாராட்டக்கூடிய அளவிற்கு அவரது இராணுவ நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்தன. தீவிரவாதிகளுக்கு எதிராக பிரதமர் மோடி எடுத்த உறுதியான ராணுவ நடவடிக்கைக்காக அவரை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக பாராட்டுகிறேன்.

ஒருபுறம், இந்தியத் திருநாட்டின் இறையாண்மைக்கும், இந்திய தேசத்து மக்களின் அமைதியான வாழ்விற்கும், தாய்நாட்டின் பாதுகாப்பிற்கும், துளியும் பங்கம் வராத அளவிற்கு, துணிச்சலான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மறுபுறம் நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டு மக்கள் மேம்பாட்டிற்காகவும் தினந்தோறும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், நேரடியாக மக்களைச் சந்தித்து அவற்றை அர்ப்பணிப்பதிலும், மிகவும் மும்முரமாக பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, புதிய நான்கு வழிச் சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் புதிய இரயில் வசதிகள் ஆகியவற்றைத் தொடங்கியும், இரண்டு, நான்கு வழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கவிருப்பதற்காகவும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தமிழக மக்களின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தென் மாவட்டங்களைச் சார்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க, மதுரையை தேர்வு செய்தமைக்காக நான் பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மாதம் 24-ம்தேதி பிரதான் மந்திரி கிஸான் சமான் நிதி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். ஏழை, எளிய விவசாயிகள் வாழ்வு வளம்பெறும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்ற இத்திட்டம் மிகவும் துணிச்சலான வரவேற்கத் திட்டமாகும். உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை மதிக்க வேண்டியதும், அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் நமது கடமையாகும். அந்த அடிப்படையில் மிகவும் பின்தங்கிய, ஏழை, எளிய விவசாய மக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்தியத் திருநாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவ வசதியை அளிக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் கொண்டு வரப்பட்டுள்ள, ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம், நாட்டு மக்களுக்கு நலம் பயக்கும் நல்ல திட்டம் என்று நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இதே போன்ற சிந்தனையோடுதான், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்ற சிறப்பான ஒரு திட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக, தமிழகத்தில் இலட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்

பிரதமர் அவர்களும், அம்மா அவர்களும் ஒத்த சிந்தனையாளர்களாக திகழ்ந்து, செயல்பட்டதால், ஒருமித்த எண்ணத்துடன் தீட்டப்பட்ட திட்டங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளன என்பதை இந்த நல்ல தருணத்தில் சுட்டிக்காட்டுவதை எனது கடமையாக கருதுகிறேன். அதுபோல், வருங்காலங்களிலும், அம்மா அவர்களது வழி நடக்கும் அம்மா அவர்களது அரசும், அம்மா அவர்களது விசுவாசத் தொண்டர்களும், பாரதப் பிரதமருடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நிச்சயமாக வெற்றிக் கொடியை நாட்டும்! அந்த மகத்தான வெற்றியை மிக விரைவில் இந்த நாடு கண் குளிரப் பார்க்கும்! மனம் நிறைந்து பாராட்டும் என்று உறுதிபட தெரிவித்து இந்த வாய்ப்பை எனக்கு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.