இந்தியா மற்றவை

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி – கர்நாடகாவில் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்தது…

பெங்களூர்:-

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று வெற்றி பெற்றது.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றார். ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடியூரப்பாவுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பதவி ஏற்ற பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடியூரப்பா,  பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அறிவித்தார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம்  காலை 11 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில் சட்டசபையில்  எடியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் எடியூரப்பா தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அதைதொடர்ந்து காங்கிரஸ் சார்பில் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் பேசினர்.

சட்டசபை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசுகையில்:-

‘நான் 14 மாதங்கள் இந்த அரசை ஓட்டினேன். உங்களுக்கு (பி.எஸ். எடியூரப்பா) பதில் அளிக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை. எனது மனசாட்சிக்கு தான் நான் பதிலளிக்க வேண்டும். கடந்த 14 மாதங்களிலிருந்து அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. நான் என்ன வேலை செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்’’ எனக் கூறினார்.

சித்தராமையா பேசும்போது, ‘நீங்கள் (பி.எஸ். எடியூரப்பா) முதல்வராக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் கிளர்ச்சியாளர்களுடன் இருக்கிறீர்கள், நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா? அது முடியாத காரியம்! இந்த நம்பிக்கை தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் இந்த அரசாங்கம் அரசியலமைப்பற்றது மற்றும் ஒழுக்கக்கேடானது’ எனக் கூறினார்.

கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

நான் விவசாயிகளின் நண்பன், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன் எனக் கூறினார்.அதைதொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா.

105 பாரதீய ஜனதா எம்எல்ஏக்கள் மற்றும் 1 சுயேச்சை எம்எல்ஏ ஆகியோர் எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடியூரப்பா அரசு தப்பியுள்ளது.