தற்போதைய செய்திகள்

நலத்திட்டங்களை வழங்கவிடாமல் தடுக்கும் எதிர்கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் – வாக்காளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்…

மதுரை:-

தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக உசிலம்பட்டி தொகுதியில் கொளுத்தும் வெயிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிரமாக வாக்கு சேகரித்தார்

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள கல்யாணிபட்டி, கல்லூத்து, பெருமாள்பட்டி, மகாலிங்கபுரம், உத்தப்பநாயக்கனூர், திம்மநத்தம், கொப்பிலிபட்டி, கீரிபட்டி, மெய்யனம்பட்டி, நெடுப்பட்டி, எருமார்பட்டி, நக்கலபட்டி, மருதம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி, ஆகிய பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் தீவிரக வாக்கு சேகரித்தார். வழியெங்கும் பொதுமக்கள் கழக வேட்பாளரை ஆரத்தியுடன் வரவேற்றனர்.

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-

அம்மாவின் நல்லாசியுடன், தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ப.ரவீந்திநாத்குமார் போட்டியிடுகிறார், இந்த உசிலம்பட்டி பகுதி என்றைக்குமே, அம்மாவின் கோட்டை. வெளியூரிலிருந்து வந்து போட்டியிடும் நபருக்கும், சுயேட்சையாக போட்டியிடும் மற்றொரு நபருக்கும் இங்கு இடமில்லை என்பதை வாக்காள பெருமக்களாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

இப்பகுதியில் பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது மத்திய அரசின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் வேட்பாளர் ரவீந்திநாத்குமார் நிச்சயம் பெற்றுத்தருவார். குறிப்பாக 58 கால்வாய் திட்டபணியை விரைவுபடுத்தி அதற்கான நிதியினை வழங்கிய ஒரே அரசு, அம்மா அரசு தான். உங்களின் அனைத்து கோரிக்கைகளையும், உடனுக்குடன் செய்து வரும் ஒரே அரசு இந்த அரசு. சிலர் ஓட்டு கேட்டு வரும் போது அதை செய்வேன். இதை செய்வேன் என்று வாயாலேயே வடை சுடுவார்கள். அவர்களால் அவர்களுக்கும் நன்மை கிடையாது. அவர்களால் உங்களுக்கும் நன்மை கிடையாது என்று உங்களுக்கே நன்றாக தெரியும்.

அது மட்டுமின்றி 29 லட்சம் ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு ரூ.1000 வழங்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று திட்டம் கிடையாது. ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கிய ஒரே அரசு இந்த அரசு தான். மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்க முதலமைச்சர் அறிவித்த போது அதற்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டனர். அதையெல்லாம் தகர்த்தெறிந்து அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் காலம் முடிந்தபின் நிச்சயம் உங்களுக்கு வழங்கப்படும் உங்களுக்கு இதுபோன்ற திட்டங்களை வழங்கி வரும் இந்த அரசுக்கு நல்ல ஆதரவை அளிக்கும் வண்ணம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நலத்திட்டங்களை வழங்கவிடாமல் தடுக்கும் எதிர்கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி, கழக அமைப்புச்செயலாளர் ம.முத்துராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.கே.ரித்தீஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, பாண்டியம்மாள், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, பிச்சைராஜன், நகர செயலாளர் பூமாராஜா, மாவட்ட கழக துணைச்செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பிரேம்ஆனந்த், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் போத்திராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ப. ரவீந்தநாத்குமார் உறுதி

இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் பி.ரவீந்திரநாத்குமார் பேசுகையில், இப்பகுதியில் உள்ள மக்கள் மகாராஷ்ட்ரா, ஆந்திரா மாநிலங்களில் வேலைவாய்ப்புத் தேடி செல்லாமல் இப்பகுதியிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் வண்ணம் அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை நிச்சயம் நான் செய்து தருவேன். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கு இருக்கை அமைக்க துணைமுதலமைச்சர் தன் குடும்ப நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

அது நிச்சயம் வழங்கப்படும். உசிலம்பட்டி பேருந்துநிலையம் அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அருகே மூக்கையாத்தேவரின் சிலையை என் சொந்த நிதியிலிருந்து அமைத்து தருவேன். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவியோடு கபடி, தடகளம், கிரிக்கெட் மற்றும் ஏனைய விளையாட்டுக்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைத்து தருவேன் என்றார்.