தற்போதைய செய்திகள்

நல்லூரில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்…

சென்னை

திருத்தணி தொகுதி நல்லூர் கிராமத்தில் துணைமின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருத்தணி தொகுதி கழக உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் பேசுகையில், புரட்சித்தலைவர், அம்மா, வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் மக்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கியதாக அறிவித்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது தொகுதிக்குட்பட்ட வீரகநல்லூர் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும், அதுவும் இந்த ஆண்டே அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதற்கு மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பதில் அளிக்கையில், திருத்தணி தொகுதி நல்லூர் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த பணி நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டதும் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டே பணிகள் தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதை தொடர்ந்து திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் புதிய மின்இணைப்புகள் பெறுவதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.தங்கமணி, கஜா புயல் பாதிப்பு காரணமாக அந்த பகுதிகளில் மின்மாற்றிகள் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதிக்கு மின்மாற்றிகள், மின்கம்பங்கள் அதிகளவு கொண்டு செல்லப்பட்டது. எனவே மற்ற பகுதிகளில் புதிய மின்இணைப்புகள் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தான் புதிய மின்கம்பம் மின்மாற்றிகள் வந்துள்ளதால் விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று பதிலளித்தார்.