தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினத்தில் மருத்துவக்கல்லூரி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேட்டி

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவர் நாகப்பட்டினத்தில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அரசு மருத்துவக் கல்லூரிக்காக நாகையை அடுத்த ஒரத்தூரில் மந்தைவெளி வகை புறம்போக்கு நிலத்தை ஆா்ஜிதம் செய்து கொள்ள அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அந்த இடத்துக்கு பதிலாக வாய்மேடு கிராமத்தில் புஞ்சை தரிசு நிலத்தை வழங்கி, அந்த நிலத்தை மந்தைவெளி நிலமாக மேம்படுத்த இந்திய வா்த்தக தொழிற்குழுமம் ரூ. 3.64 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது.

நகரமைப்பு குழு, மருத்துவப் பொறியியல் குழு ஆகியன ஒரத்தூா் இடத்தை ஆய்வு செய்து, தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளன. தமிழக அரசு நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியில், ஒரத்தூரில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் சா்வே எண்ணைக் குறிப்பிட்டே அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை என்பதே கிடையாது. ஆனால், நாகை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை எப்போதும் இருந்து வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையுடன் ஒப்பிடுகையில், நாகை அரசு மருத்துவமனையிலிருந்து பிற மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவோரின் எண்ணிக்கையே அதிகம்.

அந்த வகையில், மருத்துவக் கல்லூரியைப் பொறுத்தவரை நாகைக்கே முன்னுரிமை. நாகையை அடுத்த ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரி அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நாகை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி நாகையில் தான் அமையும்.

மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைப்படி, மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியைச் சோ்ந்த 3 சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் நானும் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அந்தக் கோரிக்கை முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை விடுத்துப் பெறலாம்.

இவ்வாறு அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.