கன்னியாகுமரி

நாகர்கோவிலில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க துரித நடவடிக்கை – என்.தளவாய் சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமான முக்கடல் அணை மற்றும் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கான ரூ.60 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் நேற்று நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வண்ணம் இறைவனின் அருளாலும், இயற்கையின் அருளாலும், தற்போது முக்கடல் அணை நிரம்பியுள்ளது. தற்போது, அணைக்கு வரக்கூடிய நீரின் அளவு போதுமான அளவு உள்ளதால், இன்னும் ஒரு வருடத்திற்கு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தடையின்றி வழங்க இயலும். இதற்காக, குழாய்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று, அப்பணிகளை வரும் மார்ச் மாதத்திற்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.250 கோடி செலவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 11 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நீர் ஆதாரம் புத்தன் அணையிலிருந்து தினமும் 40 எம்.எல்.டி தண்ணீர் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 60 சதவீத பணிகள் முடிவுற்று, எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதபோல் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்குள்ள, மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் என்ற பெயரினை மாற்றி தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் என அழைத்திட, முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கூறினார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், தமிழ்நாடு மாநில சிறுபாண்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், எக்ஸ்.எம்.எல்.ஏ, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர் கே.எல்.எஸ்.ஜெயகோபால், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.