கன்னியாகுமரி

நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி – என்.தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார்…

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற 3-வது கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவை தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் உறுதுணையுடன் அனாதை மடத்தில் நடைபெறும் 3-வது கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவை தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

மாணவர்களிடையே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்த இவ்வாறான புத்தக திருவிழா நடைபெறுவது அவசியம். எனக்கு, சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம். அதிலும், குறிப்பாக நான் சட்டம் படித்தவன் என்பதனால், அரசியல் சம்மந்தமான அத்தனை தீர்ப்புகளையும் உடனுக்குடன் படித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டு. புத்தகம் படிப்பதனால் மாணவ, மாணவிகள் மத்தியில் நன்நெறிகள் மேம்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த புத்தக திருவிழாவை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான அனைத்து விதமான புத்தகங்களை வாங்கி, படித்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு என்.தளவாய் சுந்தரம் பேசினார்.

இந்த புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ரேவதி, சார் ஆட்சியர்கள் பவன்குமார், க.கிரியப்பனவர், ஷரண்யா அரி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா, உதவி ஆணையர் (ஆயம்) ஏ.எஸ்.அபுல் காசிம், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.