தற்போதைய செய்திகள்

நாகர்கோவிலில் 3500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்- திருமண நிதி உதவி – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா- என்.தளவாய்சுந்தரம் வழங்கினர்

கன்னியாகுமரி

நாகர்கோவிலில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் 3500 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி ஆகியவற்றை வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபம், அழகிய மண்டபம், பொன் அரசி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஆகியோர் 3500 பயனாளிகளுக்கு ரூ.14.58 கோடி மதிப்பில் திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமணத்திற்கு நிதியுதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 2011 முதல் 2019 வரை 4,91,611 பட்டதாரி பெண்களும், 6,94,673 பட்டதாரி அல்லாத பெண்களும் ஆக மொத்தம் 11,86,284 பெண்கள் பயனடைந்துள்ளனர். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில் நான் மெய்சிலிர்த்து போனேன்.

கடைக்கோடியில் இருக்கும் இந்த மாவட்டம், கல்வியில் முதலிடத்தில் உள்ளது. அதிக உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புகளை படித்த பெண்கள் இம்மாவட்டத்தில் தான் அதிகம். மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்களின் குடும்ப பொருளாதாரம் முன்னேறி உள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்று அம்மா அவர்கள் ஆட்சியில் பதவி ஏற்றவுடன் கொண்டு வந்த இந்த திட்டத்தை இன்று வரை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெண் சிசு கொலை தடுக்கப்பட்டு, அந்த குழந்தையை பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கையை உறுதிப்படுத்தி தந்த அன்னைத் தெரசாவின் மறுவுறுவமுடைய தாய் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இங்கு எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என சூளுறை ஏற்று அனைவருக்கும் என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் துறையின் சார்பாகவும் குமரி மக்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

பின்னர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் பேசியதாவது:-அம்மாவின் ஆட்சியில் தான் மக்களுக்கு நலன் பயக்கும் நல்வாழ்வு திட்டங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அம்மாவின் அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அம்மா அவர்களால் ஏற்படுத்திய இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுக்கட்சியினர் எவ்வளவோ ஏளனம் செய்தாலும் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தடையின்றி செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயில்வது கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. இதன் வாயிலாக முதலமைச்சர் அம்மா அவர்களின் பெண்களுக்கான கல்வி வழங்க வேண்டுமென்ற கனவு, நனவாகியுள்ளது. பெண்களுக்காக செயல்பட்டுவரும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு தொடாந்து நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தோடு துணை நிற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா.ஸ்ரீநாத், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ஆர்.ராஜன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் ஆர்.ஜெயசுதர்சன், அரசு வழக்கறிஞர் கே.எல்.எஸ்.ஜெயகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் கதிர்வேலு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.குமுதா, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.