கன்னியாகுமரி

நாகர்கோவில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் – டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் பேச்சு…

கன்னியாகுமரி:-

நாகர்கோவில் மாநகராட்சி வரும் காலங்களில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் பேசினார்.

நாகர்கோவில் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை வழங்கியமைக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி நவில்தல் விழா நாகர்கோவில் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு நன்றி நவில்தல் விழா சிறப்புமலரின் முதல் பிரதியினை வெளியிட அதை மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

1920-ம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் நாகர்கோவில் நகராட்சிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளது. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவேன் என அறிவித்தார். அதனடிப்படையில் 22.09.2018 அன்று நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது, முதலமைச்சரிடம், நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை வைத்த போது, அதனை ஏற்று சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றப்படும் என அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சட்டமன்ற விதிகளின்படி, சட்டமுன் மொழிந்து மார்ச் 1 முதல் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு மாநகராட்சி சார்பில் நடைபெறும் நன்றி நவில்தல் விழாவில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நாகர்கோவில் மாநகராட்சி வரும் காலங்களில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும். மாநகராட்சியின் புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, தற்போது கட்டடப்பணிகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டடம் கட்டி, முடிவடையும்போது மாநகராட்சியின் இப்பழைய கட்டடம் திருமண மண்டபமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் பேசினார்.

இவ்விழாவில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.ராஜன், முன்னாள் நகர்மன்ற தலைவர் மீனாதேவ், மாநகராட்சி சிக்கன நாணய சங்க தலைவர் மு.சிவகுமார், சந்துரு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆரல்வாய்மொழி கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், வருவாய் அலுவலர் பா.குமார்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகராட்சி பொறியாளர் த.பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். மாநகர் நல அலுவலர் ஐ.கின்சால் நன்றி கூறினார்.