தற்போதைய செய்திகள்

நாகை நெய்தல் கடற்கரை கோடை விழா நிறைவு – நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசு….

நாகப்பட்டினம்:-

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெற்ற “நெய்தல் கடற்கரை கோடை விழா 2019” நிறைவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

“புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நடைபெற்று வந்த நெய்தல் கோடை விழாவில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் நாளெல்லாம் உழைத்து மாலை நேரத்தில் தங்கள் குடும்பத்தினரொடு இக்கடற்கரைக்கு வந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, மனமகிழ்ந்து வீடு திரும்புகின்றனர். இந்த நெய்தல் கோடை விழாவின் தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரையில் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவானது சிறப்புறும் வகையில் ஒத்துழைப்பு அளித்த மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுத்துறை அலுவலர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும், விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இவ்விழாவில் சிறந்த காட்சியரங்கு அமைத்ததற்காக தோட்டக்கலைத்துறைக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், இயக்குநர், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி, தங்க.கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் சங்கர், வட்டாட்சியர்(பேரிடர் மேலாண்மை) தமிமுன் அன்சாரி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.