சிறப்பு செய்திகள்

நாங்கள் கொடுப்பதை தி.மு.க. கெடுக்கிறது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…

தூத்துக்குடி:-

நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு என்றும், நாங்கள் கொடுக்கத் தான் நினைக்கிறோம். தி.மு.க. கெடுக்க நினைக்கிறது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அதைத்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையிலும் தெளிவாக கூறியிருக்கிறோம். தி.மு.க.வும் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அவர்களால் அதை எந்த அளவுக்கு அமல்படுத்த முடியும் என்று தெரியவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கூட்டணி அரசு தான். அந்த கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தி.மு.க. நினைத்திருந்தால் அவர்களை நீட் தேர்வை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. பின்னர் அந்த பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை சென்று விட்டது. இப்போது எங்களுடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். இதை நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் கழக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து பல்வேறு இடங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீ்ர்செல்வம் பிரச்சாரம் செய்தார். 102 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியபோதும் அதை பொருட்படுத்தாது சுட்டெரிக்கும் வெயிலில் துணை முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:-

தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்ததே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். தமிழகம் எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக வர வேண்டும், திகழ வேண்டும் என்ற உன்னத நிலைப்பாட்டுடன் 2023 தொலைநோக்குத் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார். அதன் விளைவாகத்தான் இன்று தமிழகம் பல்வேறு துறைகளிலும் முன்னேறி மத்திய அரசின் பல சிறப்பு பரிசுகளை பெற்றிருக்கிறது.

தி.மு.க. ஆட்சி இருண்ட தமிழகமாக இருந்தது. மாணவ, மாணவிகள் தேர்வு நேரத்தில் கூட படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மின்வெட்டு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தொலைநோக்குத் திட்டத்தோடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலில் மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தி.மு.க. ஆட்சியில் வைத்து விட்டு போன பல லட்சம் கோடி கடனை மின்சார வாரியத்துக்கு திருப்பிக் செலுத்தியதோடு சிறப்பு நிதியை ஒதுக்கி மின் உற்பத்தியை பெருக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டன் விளைவாக இரண்டே ஆண்டுகளில் தமிழகம் மின் வெட்டு இல்லாத மாநிலமாக மாறியது. மூன்றாவது ஆண்டில் மின்மிகை மாநிலமாக தமிழகம் ஒளிபெற்றுத் திகழ்ந்தது. பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை கொடுக்கின்ற அளவுக்கு மின் உற்பத்தியில் முன்னணியில் இருந்தோம்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாததால் தான் இப்பொழுது அவர்களால் எந்த உருப்படியான நன்மைகளையும் மக்களுக்கு செய்ய முடியவில்லை. நாம் மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் தட்டிப் பறிக்கிறார்கள். நாம் கொடுக்க நினைக்கிறோம். தி.மு.க. கெடுக்க நினைக்கிறது.

எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் நாம் மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை நிச்சயம் தேர்தல் முடிந்தவுடன் அவற்றை நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை முற்றிலுமாக மூடி விட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாகும். அதற்காக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்தினோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையை இந்த அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கு காரணம் தி.மு.க. ஆட்சி தான். அவர்கள் கொடுத்த சலுகையால் தான் அவர்கள் வளர்ந்தார்கள். இப்போது நம்மைப் பார்த்து குற்றம் சுமத்துகிறார்கள். இந்த ஆலையை மூட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.