தற்போதைய செய்திகள்

நாங்குநேரியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க.வுக்கு 20 கோடி ரூபாய் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

திருநெல்வேலி:-

நாங்குநேரி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க தி.மு.க.வுக்கு ரூ.20 கோடி கைமாறியுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நாங்குநேரி தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று களக்காடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் தெற்குகாடுவெட்டி கிராமத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக் கொடுத்ததில் 20கோடி ரூபாய் கைமாறியதாக காங்கிரஸ்காரர்களே சொல்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வெளிநாட்டில்தான் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். 2ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும், இதில் 200 கோடி ரூபாய் தேர்தலில் செலவழிக்க போவதாகவும் கூறுகின்றனர்.

முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. காங்கிரஸ் கட்சி பணத்திற்கு விலை போய்விட்டது. எங்களது வேட்பாளர் சாதாரண தொண்டர் மட்டுமே. அவர் பணத்தை நம்பி நிற்கவில்லை. இந்த தொகுதி வாக்காளர்களை நம்பி தேர்தலில் நிற்கிறார். காங்கிரஸ் கட்சியினரே கழக வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ளனர்.

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெளி மாவட்டத்தில் பிறந்தவர். இந்த மாவட்டத்தில் நிற்கிறார். தொகுதி விட்டு தொகுதி மாறி நிற்பது தலைவர்களுக்கு தான் பொருந்தும். ராகுல்காந்தி, சோனியா, அழகிரி போன்ற முன்னணி தலைவர்கள் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த தொகுதியில் நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வார்டு விட்டு வார்டு ஒருவர் நின்றாலே யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். ஒரு மாவட்டத்தை தாண்டி வேறு மாவட்டத்திற்கு வந்து போட்டியிடுவதை நாங்குநேரி வாக்காளர்கள் விரும்பவில்லை. வெற்றி பெற்றால் நாங்குநேரியில்தான் வசிப்பேன் என்று வசந்தகுமார் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் வெற்றி பெற்றவுடன் சென்னைக்கு சென்று விட்டார். உள்ளூரில் வசிக்கும் வேட்பாளரான எங்களது கழக வேட்பாளரை மக்கள் வெற்றிபெற செய்ய வைக்க முடிவு செய்து வி்டடனர்.

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைத்ததற்கு திமுக போட்ட வழக்குதான் காரணம். உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை வாங்கியது திமுகதான். முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்தது மாதிரி உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக பேசுவது வேடிக்கையாக உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் கழகம் மாபெரும் வெற்றிபெறும்.

நாங்குநேரி தொகுதியில் கழக ஆட்சியில்தான் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டன. அம்மா ஆட்சி காலத்தில்தான் வடக்கு பச்சையாறு நிர்த்தேக்கம் கட்டப்பட்டது. எடப்பாடியார் ஆட்சியில் வடக்கு பச்சையாறு நிர்த்தேக்க தொட்டியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே எடப்பாடியார் ஆட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் கழக வேட்பாளர் நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.