தற்போதைய செய்திகள்

நாங்குநேரி தொகுதி வளர்ச்சி அடைய கழக வேட்பாளரை வெற்றிபெற செய்வீர் : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பிரச்சாரம்

திருநெல்வேலி:-

நாங்குநேரி தொகுதி ஒரே ஆண்டில் வளர்ச்சி அடைய கழக வேட்பாளரை வெற்றி பெற செய்வீர் என்று வாக்காளர்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் சீவலப்பேரி பகுதியில் பிரச்சாரம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரை நீங்கள் எளிதில் சந்திக்கலாம். இவர் வெற்றி பெற்றால் உங்கள் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவார். ஏற்கனவே இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் தொகுதி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாததால் பின்தங்கிய தொகுதியாக உருவாக்கியுள்ளார். மேலும் அவர் தனக்கு வாக்களித்த மக்களை எண்ணிப் பாராமல் ராஜினாமா செய்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.

இன்றைக்கு தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். 234 தொகுதிகளையும் தன் சொந்த தொகுதியாக நினைத்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார். நாங்குநேரி தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் கூறியுள்ளீர்கள். நிச்சயம் உங்கள் நல்லாசியுடன் கழக வேட்பாளர் வெற்றிபெற்று அனைத்து திட்டங்களையும் ஒரே ஆண்டில் நிச்சயம் நிறைவேற்றி தருவார். ஆகவே வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் உங்க பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் இந்த தொகுதியில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித்தொகை நிச்சயம் வழங்கப்படும். பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள விசாயிகள் பயன்பெற்றுள்ளனர். ஆகவே உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசுக்கு ஆதரவு தரும் வகையில் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.

பிரச்சாரத்தின்போது திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் வி.மருதராஜ், சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் மேலூர் பி.எஸ்.துரைப்பாண்டி, ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், தக்கார் பாண்டி, பொன்னுச்சாமி, வெற்றி செழியன், நகர செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.