தற்போதைய செய்திகள்

நாங்குநேரி – விக்கிரவண்டி இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை:-

நாங்குநேரி, விக்கிரவண்டி இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணைமுதலமைச்சர் இருந்து வருகிறார். ஆனால் ஸ்டாலின் எப்படியாவது மக்கள் மனதில் இடம் பிடித்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்று இந்த அரசை குறைகூறி பல்வேறு பொய்யான கருத்துக்களை மக்களிடத்தில் பரப்பி வருகிறார். ஆனால் மக்கள் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்டாலின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை மூட்டை, மூட்டையாக கூறினாலும் ஒரு போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகும் கனவு பலிக்காது.

நடிகர் விஜய் ஒரு படவிழாவில் அரசைப்பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனத்திற்கு ஒரு தெளிவான விடை தெரிந்து விட்டது. கடந்த செப்டம்பர் 3 ம் தேதி, சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டலில் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற நடிகர் விஜய், ஸ்டாலினிடம் தனியாக பேசியதாக ஊடகங்களின் வாயிலாக அப்போதே வெளிவந்தது. தற்போது அதற்கான விடை தெரிந்துள்ளது என்பதை மக்கள் புரிந்துள்ளனர். எப்போதும் மக்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

தற்போது தேர்தல் ஆணையத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி, ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் நீண்ட இழுபறியுடன் மயிரிழையில் திமுக வெற்றி பெற்றது. இது ஒரு வெற்றியே அல்ல .

ஆனால் நடைபெறும் இடைத்தேர்தல்களில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகியோர் வகுத்து அளிக்கும் வியூகத்தின் அடிப்படையில் கழக தொண்டர்கள் களப்பணியாற்றி நிச்சயம் இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக வை டெபாசிட் இழக்கச்செய்து கழகத்திற்கு இமாலய வெற்றியை தேடித்தருவார்கள். வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு, இடைத்தேர்தலின் வெற்றி ஒரு முன்னோட்டமாக கழகத்திற்கு அமையும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.