தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிக்கனியை அம்மாவின் பிறந்தநாள் பரிசாக வழங்குவோம் – அமைச்சர் நிலோபர்கபீல் சூளுரை…

வேலூர்:-

நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கனியை அம்மாவின் பிறந்த நாள் பரிசாக வழங்க சபதம் ஏற்போம் என்று அமைச்சர் நிலோபர் கபீல் பேசி உள்ளார்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் பேரூராட்சியில் 5 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு எவர்சில்வர் குடங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் வழங்கினார்.

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி ஆலங்காயம் பேரூராட்சியில், வேலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளரும் தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான டாக்டர் நீலோபர்கபீல் ஏற்பாட்டில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கோவி. சம்பத்குமார் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி செயலாளர் பாண்டியன் துவக்க உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் நிலோபர்கபில் 5 ஆயிரம் பேருக்கு எவர்சில்வர் குடங்கள், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

பின்னர் அமைச்சர் நிலோபர் கபீல் பேசியதாவது :-

புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர். தமிழ்நாட்டு மக்கள் தான் புரட்சித்தலைவி அம்மாவின் வாரிசுகள். அம்மா அவர்களின் ஆட்சி என்றாலே மகளிர்க்கு பொற்கால ஆட்சி ஆகும். பெண்களின் பணி சுமையை குறைக்க விலையில்லா மிக்ஸி, ஃபேன் கிரைண்டர் ஆகியவற்றை வழங்கினார். கிராமங்களில் ஆதரவற்ற பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த விலையில்லா ஆடுகள், மாடுகள் ஆகியவற்றை வழங்கினார். பெண் கல்வியை ஊக்குவிக்க எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அம்மா வழியில் சிறப்பாக ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரைவாக முழுமையாக நிறைவேற்றி வருகின்றனர். மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க 16 வகையான கல்வி உபகரணங்களைஅம்மா வழங்கினார். கல்வியில் புரட்சி ஏற்படுத்தி மாணவர்களின் விடிவெள்ளியாய் திகழ்ந்தவர் அம்மா. எட்டாக்கனியாக இருந்த மடிகணியை ஏழை எளிய மாணவர்களின் கையில் தவழ செய்தவர் அம்மா .

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் பசிப்பிணியைப் போக்கினார்.
அம்மா அவர்கள் விலையில்லா மிதிவண்டிகள் , மடிகணினி, பென்சில், பேனா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி, ஊக்கத்தொகை, உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மாணவச் செல்வங்களுக்கு வழங்கினார். இந்தியாவிலேயே தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு ரூபாய் 25,000 மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் கழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பொங்கல் திருநாள் அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாட பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 வழங்கி சாதனை படைத்த அரசு அம்மாவின் அரசு. அம்மாவின் ஆட்சி என்றுமே மக்களுக்கு பயன்தரும் ஆட்சி ஆகும்.

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி தமிழக மக்களுக்கு என்ன செய்தார்? 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தார். காவேரி, முல்லை பெரியாறு அணை, பாலாறு உள்ளிட்ட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஸ்டாலின் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக எதுவுமே பேசுவதில்லை. சட்டமன்ற வெளிநடப்பு என்று சொல்லி வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதை தான் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு போதும் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது. அவருடைய பகல் கனவு பலிக்காது.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தீட்டி சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். கழக அரசு சிறுபான்மை மக்களின் நலனை பாதுகாக்கின்ற அரசாக திகழ்கின்றது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தலைமை அறிவிக்கின்ற வேட்பாளரை மகத்தான வெற்றி பெற செய்து வெற்றிக்கனியை அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக வழங்க சபதம் ஏற்போம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசினார்.