தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தினகரன் அணி காணாமல் போகும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு…

மதுரை:-

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தினகரன் அணி காணாமல் போகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

நடைபெறும் தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல். தர்மத்தின் பக்கம் கழக கூட்டணி உள்ளது. அதர்மத்தின் பக்கம் தி.மு.க. கூட்டணி உள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் 10 வருடம் அங்கம் வகித்த போது தமிழக மக்களுக்கு எந்த வளமும் சேர்க்கவில்லை. மாறாக தங்கள் குடும்பத்தை வளமாக்க வளமான துறையைத்தான் பெற்றார்கள். இப்பகுதியில் முல்லைப் பெரியாறு நீரை பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் மக்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த முல்லைப்பெரியாறை காவு கொடுத்து இப்பகுதி மக்களுக்கு துரோகத்தை செய்தனர். ஆனால் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திகாட்டியது அம்மாவின் அரசு.

அம்மாவின் மறைவிற்குப்பின் இந்த இயக்கத்தையும், அம்மாவின் ஆட்சியையும், எதிர்கட்சியினர் அழிக்க நினைத்த போது மருது சகோதரர்களாக விளங்கும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அதனை தூள் துளாக்கி இன்றைக்கு கழகத்தையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். கழகத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் இவர்களுக்கு பின்னால் அணிவகுத்து உள்ளனர். அதனால் தான் தலைமை கழகமும் புரட்சித்தலைவர் உருவாக்கிய சின்னமும், கொடியும் இன்றைக்கு நம்மிடம் உள்ளது. கழக கொடி, சின்னம் எங்குள்ளதோ அங்குதான் உண்மையான தொண்டர்கள் இருப்பார்கள்.

40 நாடாளுமன்ற தொகுதியிலும் கழக கூட்டணிக்கு வெற்றி உறுதி. இதில் நமது சோழவந்தான் தொகுதி தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். இங்கு ஏறத்தாழ 2,10,236 வாக்காளர்கள் உள்ளனர். இங்கிருக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நீங்கள் தினந்தோறும் வாக்காளர்களிடம் சென்று கழக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துரைத்து தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ப.ரவீந்திரநாத்குமாருக்கு மகத்தான் வெற்றியை தேடித்தர வேண்டும்.

கழகத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போன வரலாறு தான் உண்டு, தற்போது தினகரன் கூட அந்த நிலையில் தான் உள்ளார். தற்போது அங்கு ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அந்த அணிக்கு நோட்டா ஓட்டு கூட வாங்காது. அதன் பின் அந்த அணியே காணாமல் போய்விடும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட கழக துணை செயலாளர் அய்யப்பன், ஒன்றிய கழக செயலாளர் செல்லப்பாண்டி, வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பாப்புரெட்டி, சோழவந்தான் பேரூர் கழக செயலாளர் கொரியர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.