தர்மபுரி

நாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் கழகத்தின் நிரந்தர வெற்றிக்கு பெரிதும் காரணம் தேர்தல் களங்களா? மக்கள் மனங்களா? எனும் தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளரும், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவருமான வி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குப்புசாமி, சிங்காரம், தருமபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கழக பொருளாளர் நல்லதம்பி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ஆர்.ஆர்.பசுபதி, தருமபுரி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பெரியகண்ணு, முன்னாள் மாவட்ட பொருளாளர் எம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மொரப்பூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன் வரவேற்பு ரையாற்றினார். இந்த பட்டி மன்றத்தில் தேர்தல் களங்களே! எனும் தலைப்பில் தலைமை கழக பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், நகைச்சுவை நடிகை கே.வாசுகி ஆகியோரும், மக்கள் மனங்களே! எனும் தலைப்பில் கோவை புரட்சித்தம்பி, திரைப்பட இயக்குனர் சி.ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்கள்.

பட்டி மன்ற நடுவராக கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த நாடாளுமன்றத் தேர்த்தலுக்கு பிறகு மூடு விழா கொண்டாடும். டி.டி.வி.தினகரன் இந்த நாடாளுமன்ற தேர்தலோடு காணாமல் போய் விடுவார். பதவி இழந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நாங்கள் ரசிகர் மன்றம் அமைக்கவில்லை. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும், புரட்சித்தலைவி அம்மாவுக்கும் ரசிகர் மன்றம் அமைத்தோம். இது காலத்தின் கட்டாயம். கழகத்தை காப்பாற்றியிருக்கிறார்கள், இரட்டை இலை சின்னத்தை மீட்டிருக்கிறார்கள்.

தலைமைக் கழகத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள். ஆகவே அவர்களை போற்றுவோம். சாதாரண ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் இரண்டாண்டு காலம் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தை ஒரு வன்முறை காடாக மாற்றிப் பார்த்தார். சட்டையை கிழித்து பார்த்தார். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

அடிப்படை பொது அறிவு இல்லாதவர்கள் எல்லாம் தமிழக அரசியல் களத்தில் நமக்கு போட்டியாக வர முடியுமா ? தமிழையே தடுமாறி பேசுகிறார் முக ஸ்டாலின். பேரறிஞர் அண்ணா உடைக்க முடியாத கோட்டையாக இருந்த காங்கிரஸ் கட்சியை உடைத்து எறிந்தவர். சாதாரண தொண்டரையும் உயரத்துக்கு கொண்டு செல்கிற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும். சட்டமன்ற உறுப்பினர்களை சாதாரணமாகியது தினகரன் கட்சி. முப்பது ஆண்டுகளுக்கு பிறகும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வருகிறார் என்றால் அவர் விட்டுச்சென்ற மனிதநேயம் தான். நூற்றாண்டு கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் மனதில் வீரம் உள்ளவர்கள் எப்போதும் வீழ்வதில்லை. ஒரு அன்புதான் இன்னொரு அன்பால் தழைத்தோங்கும்.

தேர்தல் களங்களா, மனங்களா, எதை சொல்வது தேர்தல் களம் இல்லை என்றால் தேர்தலை சந்திக்க வாய்ப்பில்லை. தேர்தலை சந்திக்கவில்லை என்றால் திராவிடர் கழகமாக மாறிவிடும். தந்தை பெரியார் சமூக நீதிக்காக போராடினார். முதன்முதலாக அண்ணா தேர்தலை சந்தித்தார். 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் சென்றார்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று இந்தியை எதிர்த்து போராடி முழக்கம் செய்து வெற்றி சரித்திரத்தை படைத்தார் அண்ணா. அதற்கு முழு காரணமாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. தேர்தலில் நிற்கும் போதுதான் சமூக பங்களிப்பில் அதிகாரம் படைக்க முடியும்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு விழாக்களில் கலந்து கொள்ளலாம். சட்டமன்றங்களில் விவாதிக்கலாம். அரசில் ஒரு அங்கமாக விளங்கலாம். ஆகவே தேர்தல் களங்கள் மிக அவசியம். வெறும் தேர்தல் காலங்களில் மட்டும் இருந்தால் போதுமா மக்கள் மனதில் நாம் நிற்க வேண்டும். மக்கள் மனதில் நின்றால் தான் நாம் தேர்தலில் வெற்றிபெற முடியும். வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக வரவேண்டும், அமைச்சராக வரவேண்டும், நல்ல துறை கிடைக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தை ப் பிடிக்க வேண்டும் எனில் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்.

அமைச்சராக இருந்தபோது மக்களுடன் பணியாற்றுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. மக்களுடன் பணியாற்றுவது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. சாதாரணமானவர்களை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார் அண்ணா. அவரது கொள்கையை நீர்த்துப் போகாமல் அணையா விளக்காக அதனை தூக்கிப் பிடித்தார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவில் பத்து கோடி ரெடி பண்ணிக்கோ என்கிறார்கள்.

ஆனால் அண்ணா திமுக அப்படிபட்ட இயக்கம் இல்லை. சாதாரண ஒரு தொண்டரையும் தூக்கி நிறுத்தி சரித்திரம் படைக்கும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். தேர்தல் காலங்களில் சந்திக்க தயங்காத கட்சி அண்ணா திமுக ஆகும். மக்கள் மனங்களில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கும் கட்சி அண்ணா திமுக. அதற்கு காரணம் அண்ணாவின் கொள்கைகளை தாங்கிய எம்ஜிஆர், எம்ஜிஆரின் கொள்கைகளை தாங்கிய அம்மா, அம்மாவின் கொள்கைகளை தாங்கிய எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம். இதுதான் முழு காரணமாக நிற்கும்.

எந்த தேர்தலையும் சந்திக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயந்ததில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம். சிவகாசி, கோபிசெட்டிபாளையம் ஆகும். 89-ல் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அண்ணா திமுக விற்கு இனி மூடுவிழா தான் என்றார்கள். ஆனால் அதனை உடைத்தெறிந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நின்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கொடியை கோட்டையிலே பறக்கவிட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதுதான் மக்கள் மனங்களில் நிலைத்து இருக்கிறது.

96-ல் தோல்வி அடைந்தது. இனி இரட்டை இலை இலையுதிர் காலம் என பச்சைப் பொய்யை தி.மு.க.வினர் அவிழ்த்து விட்டார்கள். விழுந்த வேகத்தில் இரண்டே ஆண்டுகளில் எழுந்து இருக்கின்ற ஆற்றல் பெற்றவர் அம்மா அவர்கள். தோல்வி அடைந்து மீண்டு எழுபவர்களை வெற்றியாளர்கள் என வரலாற்றில் அழைக்கின்றார்கள். அவர்கள் தான் சக்சஸ் புல் மேன், சக்சஸ் புல் லீடர், சக்சஸ் புல் பார்மர். அதைத்தான் காரல் மார்க்ஸ் சொன்னார், அதைத்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சொன்னார். அதனால்தான் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., அம்மா என்று அழைத்தார்கள்.

மக்களுக்கு பணியாற்றுகின்ற ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. மக்கள் ஏதாவது சொன்னால் கூட பொறுத்து கொள்ளக்கூடிய இயக்கமாக அண்ணா திமுக இருக்கிறது. சுத்தமான ஒரு இயக்கமாக இருப்பது அஇஅதிமுக இப்படிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்.

இடைத்தேர்தல் என்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் கழகத்துக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நீதி, நியாயம் பக்கம் நீங்கள் நில்லுங்கள். அப்படி நின்றால் கழகம் பக்கம் நிற்பது போல் ஆகும். கழகத்தை பாப்பிரெட்டிப்பட்டியில் வெற்றிபெறச் செய்வது உங்களுடைய தார்மீக பொறுப்பு. கழகம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு காரணம் என்று கேட்டால் தேர்தல்களோடு கூடிய மக்கள் மனங்களும் , மக்கள் மனங்களோடு கூடிய தேர்தல்களங்களும் தான் என தீர்ப்பு கூறுகிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.