தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலோடு திமுக காணாமல் போய்விடும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு…

மதுரை:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய்விடும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாவட்ட பாண்டியன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவராக பதவியேற்ற மதுரை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜாவுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கூட்டுறவே நாட்டுயர்வு என்பார்கள். இன்றைக்கு கூட்டுறவுத்துறை இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து வருகிறது. ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட விருதுகளை கூட்டுறவுத்துறை பெற்றுள்ளது. இன்றைக்கு கூட்டுறவுத்துறை வங்கிகள் மூலம் மக்களிடத்தில் இருந்து வைப்பு நிதி பெறப்பட்டு தனியார் வங்கிகளுக்கு மேல் மக்கள் நம்பிக்கை பெற்று சிறந்து விளங்கி வருகிறது.

முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் நண்பர் ஆவார். அதனால் தான் 2019-2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் பத்தாயிரம் ரூபாய் கோடி அளவில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாது கடந்த 2018-2019-ம் ஆண்டில் 9.37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6000 கோடிக்கு மேல் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி எப்படி என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த கூட்டணி தான் நமது ஜீவாதார உரிமையை பறிகொடுத்து தமிழர்களின் உரிமையை இழக்கச் செய்தது. இலங்கையில் இனப்படுகொலை நடத்த இலங்கை ராணுவத்திற்கு ராணுவம் தளவாடங்கள் கொடுத்தது. அது மட்டுமல்லாது உலகில் மிகப்பெரிய ஊழலான 2ஜி ஸ்பெக்டரம் ஊழலை செய்தது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கழகம்- பா.ஜ.க. கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணியாகும். தமிழகத்தில் ஜீவாதார உரிமையை முதலமைச்சர் மீட்டுத் தந்துள்ளார். அது மட்டுமல்லாது அம்மாவின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பெற்றுத் தந்துள்ளோம். ஆகவே இந்த கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெருகியுள்ளது.

வருகின்ற 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நாங்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதியாகும். ஆனால் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி டெபாசிட் கூட கிடைக்காமல் அந்த இயக்கமே காணாமல் போய்விடும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.