தமிழகம்

நாடாளுமன்ற- இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயார் – தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி…

சென்னை

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் ஒரே புகைப்படம், முகவரியின் அடிப்படையிலும், புதிய சாப்ட்வேரை கொண்டும் இரட்டை பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. முழுமையாக நீக்கப்பட்டுள்ளதா? என்பதை கூற முடியாது. இரட்டை பதிவுகள் இருந்தால் நீக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். வர உள்ள நாடாளுமன்ற தேர்தல், காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தலை சந்திக்க தமிழக தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஓசூர் தொகுதி தொடர்பான அறிக்கையை சட்டப்பேரவை செயலாளர் இன்னும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கவில்லை. அறிக்கை கிடைத்தவுடன் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ஒரு கட்டமாக தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. அதே போல வர உள்ள நாடாளுமன்ற தேர்தலும் ஒரு கட்டமாக நடத்தப்படும். பல்வேறு கட்டங்களாக நடத்த வாய்ப்பில்லை.

நாடாளுமன்ற தேர்தல் வரை 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்க்கலாம். இதற்காக வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது www.nvsp.in என்ற வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் சேர சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.