தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம் – வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் சூளுரை…

தருமபுரி:-

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தருமபுரியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

கழகத்தின் தலைமையிலான வெற்றி கூட்டணி கட்சிகளின் தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் ஏ.கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர்களின் அறிமுக கூட்டம் தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் அவர்கள் வழியில் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியையும் கட்சியையும் நடத்திக்கொண்டு இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 3 தேர்தல் நடக்கிறது. தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என மூன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்திலேயே தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளை வென்று தமிழகத்தின் கழக கோட்டை தருமபுரி மாவட்டம் என நிரூபிக்க வேண்டும். அம்மா வழியில் இரு பெரும் தலைவர்கள் தமிழகத்தில் நல் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

சிலர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று தட்டுத் தடுமாறி விழுந்து வருகிறார்கள். ஆனால் அது நடக்காது. தருமபுரி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த தேர்தலில் வெற்றி பெற களப்பணியாற்ற வேண்டும். தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல், அரூர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதே நம் இலக்காகும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 15 லட்சம் தொண்டர்களைத் கழகத்தில் சேர்த்து வைத்தார். அதன் பிறகு அம்மா அவர்கள் ஒன்றரைக்கோடி தொண்டர்களை இணைத்தார். தற்போது அம்மா இல்லாததால் முழு முயற்சியோடு இந்த தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். இதற்கு அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் முழு மூச்சோடு பாடுபடவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.