தமிழகம்

நாடாளுமன்ற- சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் – கோவை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் முழக்கம்….

கோவை

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கழக கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என்று கோவை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கோவை கொடிசியா வளாகத்தில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், அவர்களுக்கு ஆதரவு கோரியும் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் நடைபெறுகின்ற இந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாட்டிற்கு தேவை உறுதியான வலிமையான பிரதமர். அந்த ஆற்றல் படைத்தவர் நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்து இந்தக் கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

ஆனால் எதிரணியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் யார் பிரதமர் என்று அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் ராகுல் காந்தி பிரதமர் என கூறி வருகிறார். ஆனால், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தில் உள்ள தலைவர்களும் பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிற நிலைதான் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற 39 நாடாளுமன்ற தொகுதிகள் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். அதேபோன்று 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்தக் கூட்டணிதான் வெற்றி பெற உள்ளது.

பாரதப் பிரதமர் நேற்றைய தினம் நாட்டுமக்களின் நலன் கருதி தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தஅறிக்கையில் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். மேலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் நதிகள் இணைப்பிற்கு தனி வாரியம் அமைக்கப்படும் எனவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் விவசாயிகள் நலன் சார்ந்தவைகளாக உள்ளன.

குறிப்பாக நதிகள் இணைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால், கோதாவரி- காவேரி நதிநீர் இணைப்பு நிறைவேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த அறிவிப்பு இருக்கிறது. காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த தி.மு.க.வை சேர்ந்தவர்களால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது. இது உலக அளவில் தமிழகத்திற்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது.

மத்திய அரசு சென்னை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் தொழிற்சாலைகள் உருவாவதற்கும் அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடவும் Defence Corridor இராணுவத் தளவாட தொழில் பெருவழித் திட்டம் உருவாகி தொழில் மிகுந்த நகரமாக மாற்றிட நாட்டிற்கு திறமையான வலிமையான பாரதப் பிரதமர் தேவை. அந்த ஆற்றல் படைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. எனவே மீண்டும் அவர் பிரதமராக வர தமிழக மக்கள் அனைவரும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.