தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்வோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் சபதம்…

தருமபுரி:-

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்க செய்வோம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர், கடத்தூர், ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ஜி.மதிவாணன் தலைமையில் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் நடை பெற்றது.

அமைச்சர் கே.பி.அன்பழகன் கூட்டத்தில் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கிய திட்டங்களில் இலவசம் என்று சொல்லக் கூடாது என்பதற்காக விலையில்லா பொருட்கள் என்ற சொல்லை சொல்ல வேண்டும் என கூறினார். அம்மா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றிய காரணத்தினால் தான் தான் அம்மா அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை கொடுத்தார்கள். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை அம்மா அவர்கள் உச்சரித்தார்கள்.

அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். இதுபோல எண்ணற்ற திட்டங்களை அம்மா அவர்கள் வழங்கினார். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண் பிள்ளைகளுக்கு 4 கிராம் தங்கமும் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயும் திருமண உதவித் தொகையாக வழங்கப்பட்டது. பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும், 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கியதும் அம்மா அவர்கள் தான். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக ஆடு வழங்கும் திட்டம், நாடு முழுவதும் பசுமை வீடு வழங்கும் திட்டம், வழங்கப்பட்டது. இது போன்ற சிறப்பான திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கியதன் காரணமாக தான் 2011-ம் ஆண்டு தேர்தலில் மக்களோடு அம்மா கூட்டணி வைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன்னந்தனியாக நின்று 37 தொகுதிகளை கைப்பற்றி இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக கழகம் உருவானது. அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தில் நின்று அத்தனை பேருமே வெற்றி பெற்றார்கள். தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது கழக அரசு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வாக்குகள் தருமபுரி மாவட்டத்தில் எந்த அளவிற்கும் குறையவில்லை.

தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தை ஆளுகின்ற வாய்ப்பை அம்மா அவர்களுக்கு தமிழக மக்கள் கொடுத்தார்கள். அம்மாவால் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் நூறு யூனிட் மின்சாரம் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தருமபுரிக்கு சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, 6 அரசு கல்லூரிகளை கொடுத்தது அம்மாவின் அரசு. இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிளை் அரசு கல்லூரிகளாக மாற்றிய பெருமை அம்மாவின் வழியிலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சாரும்.

தமிழ்நாட்டு மக்களுக்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது. கொடுத்த வாக்குறுதியையும் கொடுத்த வாக்குறுதிகளையும் கழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிலேயே சிப்காட் தொழிற்சாலை விரைவில் அமைய இருக்கிறது.

வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் யாரை வேட்பாளர்களாக நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு உங்களுடைய ஆதரவை தர வேண்டும். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற துரோகிகள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெறும். எதிரிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் அண்ணாதுரை, பேரவை ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், பரமசிவம், நிர்வாகிகள் பாண்டுரங்கன், செல்வம் ஒடசல்பட்டி சக்திவேல், சரவணன், கம்பை நல்லூர் பேரூர் கழக செயலாளர் தனபால், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அண்ணா தொழிற்சங்க தலைவர் தென்னரசு, மொரப்பூர் போஸ், கடத்தூர் சந்தோஷ்,தர்மா, மாதையன், கண்ணன், ரவி, வேப்பிலை ஆசைதம்பி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை செயலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.