சிறப்பு செய்திகள்

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான கழக தேர்தல் அறிக்கை ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை:-

நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி கழகத்தின் தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர்களிடம்  தலைமை கழகத்தில் அதற்கான குழுவினர் வழங்கினர். இத்தேர்தல் அறிக்கையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஓரிரு தினங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரிடம் கழக தேர்தல் அறிக்கை குழுவை சேர்ந்த கழக அமைப்பு செயலாளரும்,கழக செய்தி தொடர்பாளருமான சி.பொன்னையன், கழக அமைப்பு செயலாளர் நத்தம் ரா.விஸ்வநாதன், கழக அமைப்பு செயலாளரும், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டம், நீதிமன்றங்கள், சிறைத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம், கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.டபுள்யூ. ரவி பெர்னார்ட் ஆகியோர் வழங்கினார்கள். அதனை கழக ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த தேர்தல் அறிக்கை கழகத்தின் சார்பில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.