சிறப்பு செய்திகள்

நாடும்- நாட்டு மக்களும் பாதுகாப்புடன் இருக்க நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் : முதலமைச்சர் அறைகூவல்…

சென்னை:-

நாடும், நாட்டு மக்களும் பாதுகாப்புடன் இருக்க நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

ஒன்றரை கோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உயிர் மூச்சாகவும், 8 கோடி தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற இடம் பெற்று இன்றைக்கு இந்த மண்ணிலே மறைந்திருந்தாலும், மனதிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா தெய்வத்தை வணங்கி இன்றைய தினம் நாடே வியக்கின்ற அளவிற்கு ஒரு மெகா கூட்டணியை அமைத்து முதன்முதலாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலே தமிழகத்திலே கூட்டணி அமைத்துள்ளோம். அத்தனைபேருக்கும் பணிவான வணக்கத்தை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

நம்முடைய இந்திய நாடு 130 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஆகவே, உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொன்னால் அது இந்தியா தான். ஆகவே, 130 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வலிமையான, திறமையான, இந்திய நாட்டை ஆளக்கூடிய தகுதி கொண்ட ஒரே பிரதமர் நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திரமோடிஜி தான்.

ஏனென்று சொன்னால், நாம் இங்கெல்லாம் பத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று சொன்னால், இந்திய நாட்டை ஆளக்கூடிய வலிமைமிக்க பிரதமர் இருக்கின்ற காரணத்தினாலே நாம் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அப்படி திறமையான, வலிமையான, இந்த நாட்டை நிருவகிக்கக்கூடிய, தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதி நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திரமோடிஜி அவர்களுக்குத் தான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன்றைக்கு இந்தியாவிலே எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கின்றார்கள், தேசியத் தலைவர்கள் இருக்கின்றார்கள், 130 கோடி மக்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றார்கள், தேடித் தேடிப் பார்க்கின்றோம், தேடப்பட்டதிலே நமது கண்ணுக்குத் தெரிந்து தென்படுவதெல்லாம் நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திரமோடிஜி தான். 130 கோடி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம்.

ஒரு நாட்டிலே பாதுகாப்பு மிக முக்கியம். அந்த நாட்டினுடைய பாதுகாப்பை வழிநடத்திச் செல்லக்கூடிய தகுதி நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திரமோடிஜி அவர்களுக்கு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விழைகின்றேன். அதனால் தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் மற்றும் மேடையில் இருக்கின்ற பல்வேறு கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இன்றைக்கு பாரதிய ஜனதாவை ஆதரிக்கின்றோம்.

ஒரு நாட்டினுடைய பாதுகாப்பு மிக முக்கியம். இன்றைக்கு அண்டை நாட்டில் இருக்கின்றவர்கள் எல்லாம் நம் நாட்டை நோக்கி, எவ்வளவோ பிரச்சினையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதையெல்லாம் முறியடிக்க வேண்டுமென்று சொன்னால் திறமையான, வலிமையான, அத்தனையையும் தாக்குப் பிடிக்கக்கூடிய ஒரு தலைவர் இந்திய நாட்டிற்கு வேண்டும் அது நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திரமோடிஜி தான் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.

அண்மையில் காஷ்மீர் மாநிலம், புல்வாமா என்ற இடத்தில் நமது துணை ராணுவப் படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள், 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடே சோகத்தில் ஆழ்ந்தது, உலகில் இருக்கின்ற அத்தனை நாடுகளும் கண்டித்தன. அப்படிப்பட்ட நிகழ்வு இந்தியாவிலே ஏற்பட்டது. வலிமையான பாரதப் பிரதமர் இருக்கின்ற காரணத்தினாலே, உடனடியாக அதற்கு தீர்வு காண்பதற்காக இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கின்ற விதத்திலே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த முகாம்கள் மீது மிகக் குறுகிய காலத்தில் நமது விமானப்படையினர் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளின் முகாம்களை கூண்டோடு அழித்த பிரதமர் நமது பாரத பிரதமர், அதற்கு வழிவகுத்தவர் நமது பாரதப் பிரதமர்.

கடந்த 5 ஆண்டுகளாக நமது பாரதப் பிரதமர் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று நம்முடைய நாட்டினுடைய பெருமைகளை வெளிப்படுத்தினார். அதன் காரணத்தினால், இப்படிப்பட்ட பயங்கரவாதிகளினால் தாக்குதல் நடந்து, தாக்குதல் தொடர்ந்து, இன்றைக்கு கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு ஆதரவாக அத்தனை உலக நாடுகளும் நம்முடைய நாட்டிற்கு குரல் கொடுத்தது. அதற்குக் காரணம், நம்முடைய பாரதப் பிரதமர் அவர்கள் 5 ஆண்டுகாலம் இரவு, பகல் பாராமல் உழைத்து அத்தனை நாட்டு மக்களின் தலைவர்களிடத்திலே அன்பு, நட்பு காட்டியதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆதரவை தேடிய காரணத்தினாலே, இன்றைக்கு அத்தனை நாடுகளும் இந்த பயங்கரவாதத்தை கண்டித்து, நம்முடைய பாரதப் பிரதமர் அவர்களுக்கு குரல் கொடுத்த வரலாற்றை நாம் பார்க்கின்றோம்.

நமது விமானப்படை விமானி அபிநந்தன் தற்செயலாக எதிரிப்படையினரிடம் சிக்கிக் கொண்ட போது, எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் குறுகிய காலத்தில் மிக பத்திரமாக மீட்கப்பட்ட வரலாறை நம்முடைய பாரதப் பிரதமர் இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றார். ஆகவே, எந்த ஒரு நாட்டிலும் அன்னியர்கள் செல்கின்றபொழுது அந்த நாட்டினுடைய சிப்பாய்கள் சிக்கிய பிறகு அவரை பத்திரமாக மீட்கப்பட்ட வரலாறு கிடையாது. அந்த வரலாற்றை படைத்தவர் நம்முடைய பாரதப் பிரதமர்.

இன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியிருக்கின்றது. அப்படி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதன் காரணமாக 16 உயரிய விருதுகளை தமிழ்நாடு பெற்றிருக்கின்றது. அத்தனை துறைகளிலும் இன்றைக்கு சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதிலே தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்புகளை இன்றைக்கு சிறந்த முறையில் பேணிக் காக்கின்றோம். இந்தியாவிலே பார்க்கின்றபொழுது சாலை உட்கட்டமைப்பு மிகச் சிறப்பாக இருக்கின்றது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக நம்முடைய பாரதப் பிரதமர் அவருடைய திருக்கரங்களால் தமிழகத்திலே புதிய சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்தும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் இங்கே வந்து அமர்ந்திருக்கின்றார். அதற்கு, இந்த நேரத்திலே தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகாலத்திலே விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டார் நம் பாரதப் பிரதமர். இன்றைக்கு தமிழகத்திலும் சரி, மத்தியிலும் சரி சிறப்பான ஆட்சி நடந்த காரணத்தினாலே ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்கள் அத்தனை பேரும் பாதிக்கப்படாத அளவிற்கு விலை உயராமல் பாதுகாத்த பிரதமர் நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி. ஏழை, எளிய, அடித்தட்ட மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் கவனமோடு செயல்பட்ட காரணத்தினாலே விலைவாசி உயராமல் பாதுகாக்கப்பட்டது. கடந்த காலத்தில் ஆட்சி செய்தார்கள், எந்த அளவிற்கு விலை உயர்ந்தது என்று நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆகவே, மத்தியிலும், மாநிலத்திலும் திறமையான ஆட்சி இருக்கின்ற காரணத்தினாலே விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதற்கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இரண்டாம் கட்டப் பணிகள் துவங்க இருக்கின்றன. அதற்கு பிரதமர் மத்திய அரசின் சார்பாக விரைவாக அனுமதி கொடுத்து அந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உதவுமாறு அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்று சொன்னால், சென்னை ஒரு மிகப் பெரிய நகரம், வளர்ந்து வருகின்ற நகரம், மக்கள் தொகை அதிகமாக உள்ள நகரம். இந்த மக்கள் நெரிசலை போக்குவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி திட்டத்தை துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மீண்டும் இரண்டாவது கட்ட திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அன்போடு பாரதப் பிரதமர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கோதாவரி- – காவேரி இணைப்புத் திட்டம் மிகப் பெரிய திட்டம். ஏற்கனவே, பாரதப் பிரதமரை பலமுறை சந்திக்கின்றபொழுது இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று மனுவாக கொடுத்திருக்கின்றேன். ஏனென்றால், தமிழகத்தில் உள்ள டெல்டா பாசன விவசாயிகள் ஒவ்வொரு முறையும் பருவமழை பெய்கின்றபொழுது, அதை ஏங்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்டை மாநிலத்திலே அணைகள் நிரம்பிய பிறகுதான், உபரி நீரை திறந்து விடுகிறார்கள். அதை வைத்துத்தான் நம்முடைய வேளாண் பெருமக்கள் வேளாண் பணியை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.

அந்த நிலையை போக்குவதற்கு பாரதப் பிரதமர், எதை நினைத்தாலும் சாதிக்கக்கூடிய நிலையிலே இருக்கின்ற நம்முடைய பாரதப் பிரதமரால் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் கருதி, நிலையான காவிரி தண்ணீர் கிடைக்கின்ற வகையிலே, அதேபோல, கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுகின்றபொழுது, உரிய காலத்தில், பருவகாலங்களில் வேளாண் பெருமக்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்தத் திட்டம் மிக முக்கியமானது. இந்தத் திட்டத்தை நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன். இந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தந்துவிட்டால், தமிழ்நாட்டு மக்களுடைய இதயங்களிலே என்றென்றைக்கும் நிலைத்து இருக்கக்கூடிய நிலையிலே நீங்கள் இருப்பீர்கள். இந்த வரலாற்று சாதனையை படைக்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு கொள்கிறேன்.

பிரதமர் அவர்கள் சிறு, குறு விவசாயிகள் நலன் பெறவேண்டும் என்பதற்காக இன்றைக்கு வடக்கு மாவட்டத்திலே கடுமையான வறட்சி, போதிய வேலைவாய்ப்பு கிடையாது. அதேபோல கஜா புயலினால் அங்கே இருக்கின்ற மக்களெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், சிறு, குறு விவசாயிகள் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள். அப்பொழுது அந்த விவசாயிகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கின்ற அனைத்து சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகின்ற விதத்திலே அவர்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை 2000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பை தந்தவர் பாரதப் பிரதமர. விவசாயிகளை காத்தவர் பாரதப் பிரதமர். இன்றையதினம் தமிழகத்திலே 25 லட்சம் சிறு, குறு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. அதில், இதுவரை 14 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணம் வந்து சேர்ந்துள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசும், இன்றைக்கு விவசாயத் தொழிலாளிகள், ஏழைத் தொழிலாளிகள் அனைவரும் நலன் பெற வேண்டும் என்பதற்காக அம்மாவினுடைய அரசு இந்த ஏழைக்குடும்பங்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, சிறப்புத் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தோம். அந்த அறிவிப்பை கொடுத்தவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உடனடியாக அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் மூலம் நீதிமன்றத்திலே தொடர்ந்த வழக்கிற்கு எதிராக, நீதிமன்றத்திலே நாம் தீர்ப்பைப் பெற்றோம்.

இப்பொழுது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கின்றார்கள், இது தேர்தலுக்காக கொடுக்கப்படுகின்ற தொகை என்று சொல்கிறார்கள். ஏழை மக்களுக்குக் கொடுப்பது தவறா? எண்ணிப் பாருங்கள். இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்வார்கள்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்திலே இருக்கின்ற அத்தனை ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை நாங்கள் கொடுத்திருக்கின்றோம். இது தவறா? இரவு, பகல் பாராமல், இரத்தத்தை வியர்வையாக்கி மண்ணிலே சிந்தி உழைக்கின்ற அந்த விவசாயத் தொழிலாளிக்கு கொடுப்பது தவறா? ஆகவே, அப்படிப்பட்டவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டால் நாடு எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல, இன்றைக்கு ஸ்டாலின், இந்தக் கூட்டணி, நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத மக்கள் விரோத கூட்டணி என்று வேண்டுமென்றே திட்டமிட்டு பேசுகிறார். மேடையிலே வீற்றிருக்கின்ற அத்தனைபேரும் விவசாய குடும்பத்திலே பிறந்தவர்கள். நானும் ஒரு விவசாயி, பாரதப் பிரதமரும் ஒரு விவசாயி. நம்முடைய டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களும் விவசாயி. மேடையில் இருக்கின்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் விவசாயிகள் தான். விவசாயிகளுக்கு நன்மை செய்வது துரோகமா? மக்கள் விரோத ஆட்சியா? எண்ணிப் பாருங்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது, கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தார்கள், தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை செய்தார்கள்? அவர்களுடைய ஆட்சியிலே என்ன கொண்டு வந்தார்கள்? எந்தத் திட்டத்தையாவது கொண்டு வந்தார்களா? இவர்கள் குடும்பம் கொள்ளையடித்தது, இவர்கள் குடும்பம் அதிகார வர்க்கமாக மாறியது, அது தான் கண்ட பலன்.

நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் இந்தத் தேர்தலை சந்திக்கின்றார்கள். ஆகவே, வலிமைமிக்க பாரதத்தை உருவாக்க வேண்டும், நாட்டைக் காக்க வேண்டும், இன்றைக்கு பாரதம் வலிமை மிக்கதாக வேண்டும், தமிழகம் வளம் கொழிக்கும் பூமியாக மாற வேண்டுமென்று சொன்னால், பாரதப் பிரதமர் மீண்டும் இந்த நாட்டினுடைய பிரதமராக வர அத்தனைபேரும் ஒன்றுபட்டு உழைப்போம், வெற்றிக் காணிக்கையை அவருக்கு அளிப்போம் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய கூட்டணி மெகா கூட்டணி. நம்முடைய கூட்டணியைக் கண்டு ஏன் இவ்வளவு பயப்படுகின்றார்கள் என்றே தெரியவில்லை. நம்முடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கூட்டணி. அப்படிப்பட்ட கூட்டணியை நாம் அமைத்திருக்கின்றோம். அதுமட்டுமல்ல, இன்றைக்கு தமிழகத்திலே பார்க்கின்றபொழுது, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருந்தபொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களில் வெற்றி பெற்றோம். பாரதிய ஜனதா கட்சி, குமரியிலே வெற்றி பெற்றது.

மரியாதைக்குரிய பாட்டாளி மக்கள் கட்சி, ஐயா ராமதாஸ் அவர்களுடைய தலைமையிலே இருக்கின்ற கட்சி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியிலே வெற்றி பெற்றார். ஆக, தமிழகத்திலே 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்று கூட்டணி அமைத்த கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்தத் தலைமையிலே அத்தனை கட்சியும் இன்றைக்கு இணைந்திருக்கின்றது. ஆகவே, ஒட்டுமொத்தமாக வென்றது நாம் தான். ஆகவே தான், மெகா கூட்டணி என்று இந்த நேரத்திலே குறிப்பிடுகின்றேன்.

தமிழகத்தில் 39, பாண்டிச்சேரி ஒன்று என 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி தாருங்கள், தாருங்கள் என்று சொல்லி, இங்கே வருகை தந்திருக்கின்ற அத்தனைபேரும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தேனீக்களைப் போல, எறும்புகளைப் போல விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக செயல்பட்டு அத்தனை தொகுதியிலும் வெற்றி பெறச் செய்து ஆங்காங்கே போட்டியிடுகின்ற நம்முடைய கழகத்தைச் சேர்ந்தவர்களும் சரி, கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்ற இடங்களிளெல்லாம் அந்த வேட்பாளர்களை பல இலட்சம் வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெறச் செய்து மீண்டும் பாரதப் பிரதமர் அவர்களை இந்த நாட்டினுடைய பிரதமராக தேர்ந்தெடுக்க உழைப்போம், உழைப்போம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.