தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே முதன்மை தொகுதியாக தேனியை மாற்றி காட்டுவேன் – தேனி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் வாக்குறுதி…

தேனி:-

நாட்டிலேயே முதன்மை தொகுதியாக தேனியை மாற்றி காட்டுவேன் என்று தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், சின்னமனூர் நகரம், அய்யம்பட்டி, புலிகுத்தி, சங்கராபுரம், பொட்டிபுரம், எர்ணம்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட சின்னமனூர் ஒன்றிய பகுதிகள் மற்றும் போடிநாயக்கனூர் நகர் பகுதியில் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், சின்னமனூர் நகர செயலாளர் ராஜேந்திரன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன், போடிநாயக்கனூர் நகர செயலாளர் பழனிராஜ், கூட்டணி கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சாரத்தில் கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

இங்கு வந்து உங்களை சந்திப்பது புதிது அல்ல. நான் பலமுறை வந்து உங்களை சந்தித்திருக்கின்றேன். தற்போது வேட்பாளராக வந்திருக்கின்றேன். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் கண்ட இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்.

நான் வெற்றிபெற்றவுடன் நமது தொகுதியில் அடிப்படை பிரச்சினைகளை முழுமையாக தீர்த்து வைத்து இந்தியாவிலேயே முதன்மை தொகுதியாக மாற்றுவேன். போடி-மதுரை ரயில் சேவையை விரைவில் கொண்டு வருவேன். படித்த இளைஞர், இளம்பெண்களுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திட அந்தந்த பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த நடவடிக்கை எடுப்பேன்.

தொழிற்சாலைகளை இப்பகுதியில் கொண்டு வந்து வேலை வாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுப்பேன். திண்டுக்கல்-லோயர்கேம்ப் ரயில் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்வேன். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். சுயஉதவி குழுக்களுக்கு சுயதொழில் செய்து அவர்களின் வருமானத்தை பெருக்கிட தேவையான கடனுதவி கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார்.

அம்மா அரசு பொங்கல் பரிசுடன் ரூ.1000ம் வழங்கியுள்ளது. ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000ம் வழங்க உள்ளது. இப்படி மக்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்யும் கழகத்தின் வேட்பாளராக, உங்களின் ஒருவராக, உங்கள் வீட்டு பிள்ளையாக இருக்கின்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசினார்.