சிறப்பு செய்திகள்

நாட்டுபடகு மீனவ குழுக்களுக்கு செயற்கைகோள் தொலைபேசிகள் – முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 19.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், “கடலோர பேரிடர் அபாயம் குறைப்புத் திட்டத்தின்(CDRRP)” நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை திட்டத்தின் கீழ் (FIMSUL-II) 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு 5 வாட் VHF கையடக்க கருவிகளும், விசைபடகு மீனவர்களுக்கு 25 வாட் VHF கருவிகளும் வழங்கிடும் அடையாளமாக 5 மீனவப் பயனாளிகளுக்கு VHF கருவிகளை வழங்கி, இத்திட்டத்திற்கான தொலை தொடர்பு கோபுரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டினையும் துவக்கி வைத்தார். மேலும், 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மீனவக் குழுக்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கிடும் அடையாளமாக 10 மீனவக் குழுக்களுக்கு அக்கருவிகளையும் வழங்கினார்.

இதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

கடல் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட, உலக வங்கி நிதி உதவியுடன் “கடலோர பேரிடர் அபாயம் குறைப்புத் திட்டத்தின்” நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை திட்டம் மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கம்பியில்லா தகவல் தொடர்பு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக இயந்திரம் பொருத்தப்பட்ட 15,004 நாட்டுப்படகுகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் 5 வாட் VHF கையடக்க கருவிகளும். 2535 விசைபடகுகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் படகில் பொருத்தக்கூடிய 25 வாட் VHF கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிஉயர் அதிர்வெண் கைபேசிகளை (VHF) முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 5 மீனவப் பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டம் – பழவேற்காடு, சென்னை – காசிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம் – நெமிலி, விழுப்புரம் மாவட்டம் – மரக்காணம், கடலூர் மாவட்டம் – பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம், தரங்கம்பாடி மற்றும் கோடியக்கரை, புதுக்கோட்டை மாவட்டம் – கட்டுமாவடி, தூத்துக்குடி மாவட்டம் – வேம்பார் மற்றும் புன்னக்காயல், திருநெல்வேலி மாவட்டம் – உவரி, கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் மற்றும் சின்னமுட்டம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொலை தொடர்பு கோபுரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாட்டினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் தகவல் தொடர்பு வசதிக்காக தமிழ்நாடு அரசின் மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில், 1500 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளை கொண்ட 80 மீனவக் குழுக்களுக்கு, குழு ஒன்றுக்கு தலா 2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 2 நேவ்டெக்ஸ் கருவிகள் வீதம், மொத்தம் 160 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 10 மீனவக் குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் நேவ்டெக்ஸ் கருவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.