தற்போதைய செய்திகள்

நாட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் – அமைச்சர் பா.பென்ஜமின் பிரச்சாரம்….

திருவள்ளூர்:-

நாட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க மோடியே மீண்டும் பிரதமராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பா.பென்ஜமின் பிரச்சாரம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், மற்றும் தமிழ் ஆராய்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் ஆகியோர் நாடாளுமன்ற கழக வேட்பாளர் பி.வேணுகோபால், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் க.வைத்தியநாதன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தனர்.

வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருக்கிறது. தோழமை கூட்டணி கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். இது இந்திய திருநாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. நாடாளுமன்றத் தேர்தல் என்று சொன்னால் நாட்டின் பாதுகாப்பு முக்கியம், வளர்ச்சியும் முக்கியம். நாட்டினுடைய பாதுகாப்புக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கிறது.

அப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு இந்திய நாட்டை வழிநடத்த கூடியவராக ஒரு வல்லமை படைத்தவராக திறமை இருக்க கூடியவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வல்லமை படைத்தவராக திறமை படைத்தவராக இருப்பவர்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மீண்டும் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமரானால் இந்த உலகமே இந்தியாவை உற்றுப் பார்க்கும் அளவிற்கு இந்திய திருநாட்டை பாதுகாப்புக்கும் வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு செல்வார். அப்படி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதற்கு நீங்கள் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால்தான் நாட்டின் பாதுகாப்பு இருக்கும். வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்ல முடியும். தோழமை கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர்ந்து கடுமையாக உழைத்து வெற்றிக்கு பாடுபடுவோம். நாடாளுமன்ற வேட்பாளரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த முறை இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்ற நமது நாடாளுமன்ற வேட்பாளர். இந்த முறை இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வெற்றி பெற்ற வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெருவாரியாக வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.