சிறப்பு செய்திகள்

நான் தவறு செய்யவில்லை என நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவி விலக தயாரா? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பகிரங்க சவால்….

சென்னை,

நான் தவறு செய்யவில்லை என நிரூபித்து விட்டால் எதிர்க்கட்சி தலைவர் பதவி விலக தயாரா? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

புதுடெல்லியில்  நடைபெற்ற மத்திய அரசின் தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில் தமிழ்நாட்டில் 2017.18-ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 3 தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் நரேந்திரசிங் டோமர் வழங்கி்னார். அந்த விருதை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் எஸ்,பி.வேலுமணி அளித்த பேட்டி வருமாறு:-

“திமுக சார்பில் ஒரு புகார் மனுவை ஆர்.எஸ்.பாரதி அளித்திருக்கிறார். முதலமைச்சரும். துணை முதலமைச்சரும் தமிழக அரசை நன்றாக வழி நடத்துகிறார்கள்.இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என தி.மு.க பல முயற்சிகள் எடுத்தது. அவை ஒன்றும் நடக்கவில்லை. முதலில், முதலமைச்சர். துணை முதலமைச்சர் மீதும் மனு கொடுத்தார்கள். அதற்குப் பின்னால் வரிசையாக அமைச்சர்கள் மீது மனு கொடுக்கிறார்கள்.

அந்த வரிசையில் எனக்குப் பின்னால் தான் வருவார்கள் என நினைத்தேன். ஆனால், முன்பே வந்துவிட்டனர். நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஸ்டாலின் நிர்வகித்த உள்ளாட்சித் துறையை எனக்கு மறைந்த முதலமைச்சர் அம்மா வழங்கினார். இந்தத் துறையைச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். கழகத்தை முடக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். அதனால் தான் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.

மு.க.ஸ்டாலின் நிர்வகித்ததை விட உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுகிறது. கூடுதலான குடிநீர் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதிகமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்காலத்தில் மொத்தமாகவே 7 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கி யிருந்தனர். கூடுதலாக குடிநீர் சப்ளை, திடக்கழிவு மேலாண்மை என சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம்.

என்னையும் அமைச்சர் தங்கமணி போன்றவர்களையும் முடக்குவதற்காக இத்தகைய புகார்களைக் கூறுகின்றனர். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களை மனுவில் பார்த்து தான் எனக்கே தெரியும். என்னுடைய துறையை தவறாகப் பயன்படுத்தி விதிமுறை மீறி டெண்டர்களை யாருக்கும், எந்த நிறுவனத்திற்கும் கொடுக்கவில்லை. தி.மு.க.வினரே பல ஆலைகள் நடத்தியுள்ளனர். சாராய ஆலைகள் கூட நடத்தியிருக்கின்றனர். அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த தவறும் நான் செய்யவில்லை.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பெயர் உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு பொறுப்பேற்று தான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும், தி.மு.க தலைவர் பதவியையும் அழகிரிக்கோ, துரைமுருகனுக்கோ ஸ்டாலின் கொடுக்கட்டும். அப்படிச் செய்தால் நான் நாளைக்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

என் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் கட்சிப்பதவியையும் துறந்து விட்டு அரசியலை விட்டு விலகி விடுகிறேன். நான் நான் தவற செய்யவில்லை என நிரூபித்து விட்டால் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விலக தயாரா? திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மட்டும் ஸ்டாலினுக்கு ஏராளமான பினாமி சொத்துகள் உள்ளன. தி.மு.க என்ன செய்தாலும் கழக ஆட்சி தொடரும். கட்சி, ஆட்சி இரண்டையும் முடக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் தி.மு.கவை விட 100 மடங்கு அதிகமாக செய்துள்ளோம். மத்தியில் கூட்டணியில் இருந்த.போது கூட தி.மு.க இலங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினை களுக்கு தீர்வு காணவில்லை.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.