சிறப்பு செய்திகள்

நான் நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயாரா? ஸ்டாலினுக்கு எஸ்.பி.வேலுமணி பகிரங்க சவால்…

கோவை:-

நான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகத் தயாரா? என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூரில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்த உடன் கழகம் அழிந்து விடும், ஆட்சி கலைந்து விடும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு கண்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சட்டமன்றத்தில் கலவரம் செய்து சட்டையை கிழித்துக்கொண்டு வெளிநடப்பு என்ற நாடகத்தை நிகழ்த்தினார். முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக தினம் தினம் அவதூறு பரப்பி வந்தார். நாங்கள் புரட்சித்தலைவி அம்மாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். மு.க.ஸ்டாலின் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்.

கழகம் பிளவுபட்ட போது அதை ஒன்றிணைக்க நானும், அமைச்சர் பி.தங்கமணியும் முக்கிய பங்காற்றினோம். மேலும் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் வகையில் மெகா கூட்டணி அமைய உறுதுணையாக இருந்தோம். இந்த வலிமையான தேர்தல் கூட்டணியை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் தரம் கெட்ட வார்த்தைகளால் எங்களை விமர்சிக்கிறார். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சிக்கு வாரிசு அடிப்படையில் தலைவராக இருந்து கொண்டு தரம் கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்வதால் தலைமைக்கு தகுதி இல்லாதவர் ஸ்டாலின் என்பதை தான் காட்டுகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என் மீது அவதூறு பரப்பும் வகையில் மேடைகளில் பேசினார். அப்பொழுது ஸ்டாலினுக்கு நேரடியாகவே நான் சவால் விட்டிருந்தேன். என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் புரட்சித்தலைவி அம்மா எனக்கு அளித்த கழக அமைப்பு செயலாளர் பதவியையும், 12 வருடங்களாக நான் பொறுப்பேற்றிருக்கும் மாவட்டச் செயலாளர் பதவியையும், முக்கியமாக உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதோடு அரசியலை விட்டு விலகத் தயார். அதேபோல் குற்றம் நிரூபிக்கப்படவில்லையெனில் நீங்கள் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விடுத்தேன். ஸ்டாலினிடமிருந்து இதுவரையில் பதில் இல்லை.

உலகிலேயே முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் ஸ்டாலின் குடும்பம் உள்ளது. இவர் என்ன தொழில் செய்து சம்பாதித்தார். உங்கள் மகனுக்கு திரைப்பட தயாரிப்பு கம்பெனி எப்படி வந்தது? இவற்றுக்கெல்லாம் ஸ்டாலினால் பதில் கூற முடியுமா?
மீண்டும் சவால் விடுகிறேன், என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலக தயார். நிரூபிக்கப்படவில்லை எனில் நீங்கள் அரசியலை விட்டு விலக தயாரா?சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீதும், என் மீதும் அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.