தற்போதைய செய்திகள்

நாமக்கல் கழக வேட்பாளர் வெற்றி உறுதி – அமைச்சர் பி.தங்கமணி பேச்சு…

நாமக்கல்:-

கொங்கு சமுதாயத்தின் அனைத்து பிரிவு தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் நாமக்கல் கழக வேட்பாளர் வெற்றி உறுதியாகி விட்டது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எல்.எஸ் (எ) ப.காளியப்பனுக்கு, தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை, பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்குநாடு மக்கள் கட்சி, ராஜ் கவுண்டர் தலைமையிலான புதிய திராவிடர் கழகம் உட்பட கொங்கு சமுதாயத்தின் அனைத்து குல தலைவர்களும், கழக வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதாகவும், கழக வேட்பாளர் டி.எல்.எஸ் (எ) ப.காளியப்பன் வெற்றி பெற செய்ய கடுமையாக உழைப்பதாகவும், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர்.வெ.சரோஜா ஆகியோரிடம் உறுதியளித்தனர்.

ராசிபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைந்ததற்கு பின்னால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு விவசாயி இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார். இந்த ஆட்சியை எப்படியாவது கலைக்க வேண்டும். இந்த ஆட்சியை வீட்டிற்கு எப்படியாவது அனுப்ப வேண்டும் என்பதற்காக இரண்டாண்டு காலமாக எத்தனை கஷ்டங்களை கொடுத்தார்கள். எத்தனை கஷ்டம் மட்டுமல்ல இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கலைத்தார்கள், அதற்காக சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதை எல்லாம் போராடி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டாக அடியெடுத்து வைத்து சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு செய்திருக்கின்ற சாதனைகளை போல் மற்ற பகுதிக்கும் செய்திருக்கிறார். நாமக்கல்லை பொறுத்தவரை திருச்செங்கோட்டில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலை எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். 130 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே நாமக்கல் மாவட்டத்திலேயே தான், மாநில நிதியிலிருந்து நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. இந்த எட்டு ஆண்டு காலத்தில் நான்கு தாலுகா அலுவலகங்களை பெற்றிருக்கின்றோம். 2 கலை கல்லூரிகளை பெற்றிருக்கிறோம். ஒரு தீயணைப்பு நிலையம் ஒரு காவல் நிலையம் கேட்டிருக்கின்றோம் மகளிர் நர்சிங் கல்லூரியும் கேட்டிருக்கிறோம். இப்படி சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம், அந்த அளவிற்கு நாங்கள் செய்திருக்கின்றோம்.

முதலமைச்சர் ஒரு விவசாயியாக இருக்கின்ற காரணத்தினால் ஒரு விவசாயினுடைய கஷ்டத்தை அறிந்தவர். எளிதில் சந்திக்க கூடிய ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கின்றோம். இங்கே பல தொழிலதிபர்கள் வந்திருக்கிறார்கள். யாதாவது ஒரு அஇஅதிமுகவினர் வந்து உங்கள் இடத்தில் நிதி வேண்டும் கட்சிக்கு நிதி வேண்டும் என்று தொந்தரவு செய்து இருக்கின்றார்களா இல்லை. ஆனால் திமுகவைச் சேர்ந்தவர்கள் அப்படியல்ல. எதிர்க்கட்சியாக இருக்கின்றபோது என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை எல்லாம் டிவியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கே நிற்கின்ற வேட்பாளர் சென்றால் அவருடைய இயக்கத்தினுடைய தலைவராக இருக்கின்ற ஈஸ்வரன் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு அறிக்கைகளை விட்டு விவாதத்திற்கு தயாரா என்று கேட்கிறார்.

நாங்கள் என்ன தவறு செய்தோம் ஏன் எங்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்றுதான் உங்களிடத்திலே கேட்கிறோம். எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். அவர்கள் என்ன சாதனை செய்து இருக்கிறார்கள். அவர்கள் தனியாக ஒரு எம்.பி. வந்து இந்த மாவட்டத்திற்கு என்ன செய்துவிட முடியும். இவர்களால் என்ன நடக்கப்போகிறது.

நானும், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் மற்றும் வேட்பாளர் காளியப்பன் எல்லோரும் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எங்களை எளிதில் சந்திக்கலாம். அதேபோல் எளிதில் சந்திக்கக்கூடிய முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். துரோகம் ஒருபுறம் எதிரி ஒருபுறம் இருவரும் கைகோர்த்து கொண்டு இந்த ஆட்சி போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நாம் இடம் கொடுக்காமல் பணியாற்ற வேண்டும், கொங்கு சமுதாயத்தின் அனைத்து பிரிவு குல தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் கழக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி விட்டது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.