இந்தியா மற்றவை

நாளை வாக்கு எண்ணிக்கை: 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறப்பு…

நாடு முழுவதும் 17-வது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஏற்படும் கோளாறுகள் குறித்து புகார் தெரிவிக்க புதிதாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை தேர்தல் ஆணையம் திறந்துள்ளது.

நாடு முழுவதும் 17-வது மக்களவைக்கான 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதியன்று நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. மேலும், ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாளை வியாழக்கிழமை (மே 23) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைகளுக்கான சுற்றுகள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதெனும் கோளாறு ஏற்பட்டால் அது குறித்து தகவல் தெரிவிக்க தில்லியில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய கட்டுபாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஏற்படும் கோளாறுகள் குறித்து 011-23052123 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.