தற்போதைய செய்திகள்

நிதி அமைச்சகத்தின் 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு – நிர்மலா சீதாராமன் நடவடிக்கை…

புதுடெல்லி:-

மத்திய நிதி மந்திரியாக சமீபத்தில் நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து அவர் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் நிதி அமைச்சகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளில் 12 உயர் அதிகாரிகளுக்கு அதிரடியாக கட்டாய ஓய்வு கொடுத்து, பணியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் புகார் மற்றும் செக்ஸ் புகார்கள் அடிப்படையில் அவர்கள் மீது இந்த நடவடிக்கையை நிதி அமைச்சகம் எடுத்துள்ளது.கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டவர்களில் இணை கமி‌ஷனர் அந்தஸ்தில் இருக்கும் உயர் அதிகாரியும் ஒருவர் ஆவார். இவர் அரசியல் சாமியார் சந்திரா சாமியிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஐ.ஆர்.எஸ். அந்தஸ்து அதிகாரி ஒருவருக்கும் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் இருக்கும் இவர் 2 ஐ.ஆர்.எஸ். பெண் அதிகாரிகளிடம் பாலியல் துன்புறுத்தலுக்கு முயற்சி செய்ததாக புகார்கள் கூறப்பட்டு இருந்தது. மற்றொரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

வருமான வரித்துறையில் மேலும் சில அதிகாரிகளும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர். கமி‌ஷனர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக பணியில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தலின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.